விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து கலெக்டர் பேசினார்
விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து கலெக்டர் பேசினார்
அனுப்பர்பாளையம், மே.9-
திருப்பூர் மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து கலெக்டர் பேசினார்.
விழிப்புணர்வு முகாம்
திருப்பூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிம துறையின் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் திருப்பூர் ராயபுரம் பூங்கா அருகே நேற்று நடைபெற்றது. இதை மாவட்ட கலெக்டர் வினீத் தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி அக்ஷய திருதியை முன்னிட்டு குழந்தை திருமணங்கள் அதிக அளவில் நடைபெற இருப்பதாக பரவிய தகவலை தொடர்ந்து மாவட்ட சமூக நல அலுவலர் உடன் இணைந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், இந்து சமய அறநிலையத்துறை, ஒருங்கிணைந்த சேவை மையம், சமூக நல விரிவாக்க அலுவலர் மற்றும் மகளிர் நல அலுவலர்கள் ஆகியோரை கொண்டு குழந்தை திருமணங்கள் நடப்பதை தடுக்கும் பொருட்டும் குழந்தை திருமணங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்த அறிவுரை வழங்கப்பட்டிருந்தது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
இதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், பல்வேறு நூற்பாலை மற்றும் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். மேற்படி தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு வழங்கும் வகையில், குழந்தை திருமண தடுப்பு சட்டம், போக்சோ சட்டம், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், கல்வி இடைநிலை தடுக்கவும், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களை கொண்டு சிறப்பு விழிப்புணர்வு முகாம் வருகிற 8 வாரங்களுக்கு கண்டறியப்பட்டுள்ள 15 இடங்களில் தொடர்ந்து நடைபெற உள்ளது.
தடுப்பு நடவடிக்கை
அதன் அடிப்படையில் முதல் வாரத்திற்கான விழிப்புணர்வு முகாம் திருப்பூர் ராயபுரம் பகுதியில் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு தங்களது துறை சார்ந்த திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பொதுமக்களுக்கு சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் திட்டங்களை, பெண்களுக்கான இலவச உதவி எண் 181, குழந்தைகளுக்கான இலவச உதவி எண் 1098, முதியோர்களுக்கான இலவச உதவி எண் 14567 போன்ற துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கலெக்டர் வினீத் துண்டு பிரசுரங்கள் மற்றும் விளம்பர பதாகைகளை வெளியிட்டு விழிப்புணர்வு குறித்த குறும்பட காட்சியினை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி அம்பிகா, இணை ஆணையர் (தொழிற்சாலை) புகழேந்தி, போலீஸ் உதவி ஆணையர் மோகன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மரகதம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story