உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் பிற்படுத்தப்பட்ட சமூக ஆணையம்


உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் பிற்படுத்தப்பட்ட சமூக ஆணையம்
x
தினத்தந்தி 8 May 2022 9:17 PM IST (Updated: 8 May 2022 9:17 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க பிற்படுத்தப்பட்ட சமூக ஆணையம் அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

இட ஒதுக்கீடு

  சுப்ரீம் கோர்ட்டு, உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பின்தங்கிய சமூகங்களை உரிய புள்ளி விவரங்கள் அடிப்படையில் தேர்வு செய்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். இதன் காரணமாக கர்நாடகத்தில் மாவட்ட-தாலுகா பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

  பின்தங்கிய சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்வது தொடர்பாக கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் கடந்த மார்ச் 23 மற்றும் 31-ந் தேதிகளில் நடைபெற்றது. இதில் அனைத்துக்கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். இதில், பிற்படுத்தப்பட்ட சமூகங்களை கண்டறியும் நோக்கத்தில் ஒரு ஆணையம் அமைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

அறிக்கை தாக்கல்

  அதன்படி, ஓய்வு பெற்ற நீதிபதி பக்தவத்சலம் தலைமையில் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் அரசியல் பிரதிநிதித்துவ ஆணையம் அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் உறுப்பினராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சி.ஆர்.சிக்கமட் என்பவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அந்த ஆணையம் பின்தங்கிய சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்து புள்ளி விவரங்களுடன் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும்.

  அந்த ஆணையம் அறிக்கை வழங்கிய பிறகு அதுகுறித்து பிரமாண பத்திரத்தை சுப்ரீம் கோர்ட்டில் அரசு தாக்கல் செய்யும். இட ஒதுக்கீடு வழங்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கிய பிறகே கர்நாடகத்தில் மாவட்ட-தாலுகா பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story