699 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.18½ கோடி கடனுதவி
தேனி மாவட்டத்தில் 699 மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு ரூ.18 கோடியே 49 லட்சம் மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் (மகளிர் திட்டம்) சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் கடந்த ஓராண்டு கால கட்டத்தில் 699 மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு ரூ.18 கோடியே 49 லட்சம் மதிப்பில் நேரடி கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது.
அதுபோல், நலிவுற்றோர் மேம்பாட்டு நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 84 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் நிதிஉதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் 322 பேருக்கு எலக்ட்ரீசியன், கைபேசி பழுதுபார்த்தல், தையல், கணினி பயிற்சி போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story