கர்நாடக காங்கிரஸ் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது; நளின்குமார் கட்டீல் சாடல்


கர்நாடக காங்கிரஸ் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது; நளின்குமார் கட்டீல் சாடல்
x
தினத்தந்தி 8 May 2022 9:25 PM IST (Updated: 8 May 2022 9:25 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக காங்கிரஸ் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் சாடியுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் சாடியுள்ளார்.

ராம ராஜ்ஜியம்

  கர்நாடக பா.ஜனதா கட்சியின் இளைஞர் அணி செயற்குழு கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-
  கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) தேர்தல் நடக்கிறது. இதில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க அனைத்து நிர்வாகிகளும் பாடுபட வேண்டும். நாட்டில் ராம ராஜ்ஜியம் ஏற்பட வேண்டும் என்று மகாத்மா காந்தி விரும்பினார். அவரது விருப்பத்தை நிறைவேற்ற பா.ஜனதா பாடுபட்டு வருகிறது.

தவிர்க்க முடியாது

  பிற கட்சிகளில் குடும்ப அரசியலுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆனால் பா.ஜனதாவில் தேநீர் விற்பவரும் பிரதமராக முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பிற கட்சிகளில் சாதி, செல்வாக்கு, பணம் உள்ளிட்டவை இருந்தால்தான் பதவி கிடைக்கும். பா.ஜனதாவில் குடும்ப பின்னணி தேவை இல்லை.

  முன்பு மந்திரிகளின் வீடுகளில் காத்து கிடந்தவர்களுக்கு பத்ம விருதுகள் கிடைத்தன. பா.ஜனதா ஆட்சியில் பழங்கள் விற்ற ஹாஜப்பா, காட்டை பாதுகாக்கும் துளசிகவுடா போன்ற சாமானியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. மதமாற்ற தடை, பசுவதையை தடை செய்வது போன்ற விஷயங்களில் இருந்து பா.ஜனதா பின்வாங்கவில்லை.

குடும்ப அரசியல்

  காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ளோம். அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் இலக்கிலும் சரியான முறையில் பயணித்து வருகிறோம். அதிகாரத்தை அடைவது மட்டுமே குறியாக கொண்டு பணியாற்ற வேண்டாம். காங்கிரசில் ஒரு குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. ஆனால் குடும்ப அரசியலை பின்பற்றாத பா.ஜனதா வளர்ந்து வருகிறது. உலகின் பெரிய கட்சியாக பா.ஜனதா உருவெடுத்துள்ளது. மற்றொருபுறம் காங்கிரஸ் இல்லாத நாடு உருவாக்கப்பட்டு வருகிறது. மோடி யுகம் தொடங்கியுள்ளது.

  கர்நாடகத்தில் காங்கிரஸ் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது. பிரதமர் மோடி கடந்த 8 ஆண்டுகளாக ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை நடத்தி வருகிறார். அா்க்காவதி லே-அவுட் முறைகேடு தொடர்பாக நீதிபதி கெம்பண்ணா அறிக்கையை வெளியிட்டால் சித்தராமையா நிரந்தரமாக சிறையில் தான் இருப்பார். அந்த அறிக்கையை எங்கள் அரசு வெளியிடும். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார். இது பாராட்டுக்குரியது.

  இவ்வாறு நளின்குமார் கட்டீல் பேசினார்.

Next Story