தியாகதுருகத்தில் கால்வாயில் அடைப்பு: விளைநிலங்களுக்குள் புகுந்த கழிவுநீரால் பயிர்கள் பாதிப்பு விவசாயிகள் வேதனை
தியாகதுருகத்தில் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக கழிவுநீர் விளைநிலங்களுக்குள் புகுந்தது. இதனால் பயிர்கள் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் பேரூராட்சிக்குட்பட்ட புக்குளம் பகுதியில் விவசாயிகள் அதிக நிலப்பரப்பில் வாழை, சம்பங்கி, குண்டு மல்லி ஆகியவை பயிரிட்டு பராமரித்து வருகின்றனர். பயிர்கள் நன்கு வளர்ந்து வரும் நிலையில், விளை நிலங்களுக்குள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் புகுந்து விடுகிறது. இதனால் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பெரும் செலவு செய்து வாழை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து பராமரித்து வந்தோம். இந்த நிலையில் புக்குளம் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கால்வாயில் சீராக செல்லாமல் விளை நிலங்களுக்குள் புகுந்து விடுகிறது. இது குறித்து புகார் அளித்த பின்பும் கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. விளை நிலங்களுக்குள் புகுந்த கழிவுநீரால் எங்களது வாழை, சம்பங்கி, குண்டுமல்லி உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கழிவுநீரால் பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டு எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story