புகார் பெட்டி
புகார் பெட்டி
`தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகாருக்கு உடனடி தீர்வு
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் கெங்கை சுடலைமாடசாமி கோவில் அருகே மின்கம்பம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது. இதுபற்றி குலசேகரன்பட்டினத்தை சேர்ந்த கந்தசாமி என்பவர் `தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு கடந்த 7-ந்தேதி செய்தியாக பிரசுரம் ஆனது. இதில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை மாற்றி உள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த `தினத்தந்தி'க்கும், அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
பள்ளி வளாகத்தில் சுகாதார கேடு
நெல்ைல மாவட்டம் மேலப்பாளையம் அம்பிகாபுரம் ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி வளாகத்தில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பாலமுருகன், மேலப்பாளையம்.
போதிய இருக்கை இல்லையே!
வள்ளியூர் பஸ் நிலையத்தில் போதிய இருக்கைகள் இல்லை. குறிப்பாக, ராதாபுரம், கூத்தங்குழி பஸ்கள் நிற்கும் இடத்தில் இருக்கைகள் இல்லாமல் பெண்கள், குழந்தைகள், முதியோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போதிய இருக்கை வசதி ஏற்படுத்தி தர வேண்டுகிறேன்.
- ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.
குப்பைகள் நிறைந்த பாதை
பொட்டல்புதூரில் உள்ள துர்க்கையம்மன் கோவிலுக்கு செல்லும் பாதையில் அசுத்தமும், குப்பைகளும் நிறைந்து சுகாதார கேடாக உள்ளது. எனவே அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.
- விக்னேஷ், பொட்டல்புதூர்.
மூடப்படாத பள்ளம்
தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் வீராசமுத்திரம் பள்ளிவாசல் தெருவில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவின் நுழைவு வாயிலில் வாறுகாலை கடந்து செல்ல தரைப்பாலம் உள்ளது. அந்த பாலத்தின் நடுவே உள்ள பள்ளத்தில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு மூடி, கனரக வாகனங்கள் சென்றதால் சேதமடைந்து பள்ளத்தில் விழுந்து கிடக்கிறது. இதனால் பள்ளம் கடந்த சில நாட்களாக திறந்த நிலையில் உள்ளது. இரவு நேரத்தில் இந்த பகுதிக்கு புதிதாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே அந்த பள்ளத்தை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
- அம்ஜத், முதலியார்பட்டி.
சேதமடைந்த சமுதாய நலக்கூடம்
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா சேதுக்குவாய்த்தான் கிராமத்தில் உள்ள சமுதாய நலக்கூடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதுபற்றி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்த பயனும் இல்லை. எனவே இதை சீரமைக்க வேண்டும்.
- கோமதிராஜ், சேதுக்குவாய்த்தான்.
குடிநீர் வினியோகம் சீராக இல்லை
திருச்செந்தூர் நகராட்சி 15-வது வார்டு சபாபதிபுரம் தெருவில் கடந்த சில வாரங்களாக சீராக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டால் குழாயில் உடைப்பு, மோட்டார் பழுது என்று கூறுகிறார்கள். போதிய குடிநீர் இ்ல்லாததால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நாகராஜன், திருச்செந்தூர்.
ரவுண்டானா அமையுமா?
காயல்பட்டினம் பஸ் நிலையம் அருகில் 5 ரோடுகள் சந்திக்கும் இடத்தில் ரவுண்டானா இல்லை. காலையில் அந்த பகுதியில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்வோர் அதிகளவில் பயணிக்கிறார்கள். இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதேபோல் மாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே 5 ரோடுகள் சந்திக்கும் பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும்.
- சண்முகவேல், காயல்பட்டினம்.
மரக்கிளைகளை அகற்ற வேண்டும்
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை குமாரகிரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கூட்டாம்புளியில் ரோட்டோரங்களில் உள்ள மரங்களின் கிளைகள் தாழ்வாக சாய்ந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பஸ்களில் செல்லும் பயணிகள் மீதும், பஸ் கண்ணாடிகளின் மீதும் உரசி அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரத்தின் கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நிர்மல், கூட்டாம்புளி.
தடுப்பு சுவர் அவசியம்
கோவில்பட்டியில் ஆக்கிரமிப்பு ஓடை கடைகளை அகற்றி பல மாதங்கள் ஆகி விட்டது. தடுப்பு சுவர் மற்றும் மின்விளக்கு வசதி இல்லாததால் மழைக்காலங்களில் ரோடும், நீர்வரத்து ஓடையும் ஒரே மாதிரியாக இருப்பதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் இதில் நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும்.
- பாலமுருகன், கோவில்பட்டி.
Related Tags :
Next Story