கோடை விடுமுறை முடிந்து மே 16-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும்-கல்வித்துறை மந்திரி பி.சி நாகேஷ்
கோடை விடுமுறை முடிந்து மே 16-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை மந்திரி பி.சி நாகேஷ் தெரிவித்துள்ளார்
மங்களூரு: கோடை விடுமுறை முடிந்து மே 16-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை மந்திரி பி.சி நாகேஷ் தெரிவித்துள்ளார்.
கல்வித்தரம் மேம்படவேண்டும்
தட்சிண கன்னடா மாவட்டம் பண்டுவால் தாலுகா தட்டலக்காடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் புதிய கட்டிடம் மற்றும் வகுப்பறைகள் திறப்பு விழா நடந்தது. இதில் மாநில பள்ளிக் கல்வித்துறை மந்திரி பி.சி நாகேஷ் மற்றும் மத்திய மந்திரி ஷோபா கரந்தலாஜே ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தனர்.
அப்போது பேசிய மத்திய மந்திரி ஷோபா கரந்தலாஜே கூறியதாவது:-
கர்நாடகத்தில் உள்ள குழந்தைகள் அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ள உதவிகள் தேவை. அப்போதுதான் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். மாணவர்கள் மொழியை கற்று கொள்வதில் அரசியல் நெருக்கடி மற்றும் பிரச்சாரம் கூடாது. அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்காக மாநில அரசு கோடி கணக்கில் பணம் ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் பெற்றோர் தரமான கல்வி வழங்கப்படவில்லை என்று கூறுகின்றனர். இதற்கு ஆசிரியர்கள் தான் காரணம். ஆசிரியர்கள் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும். தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்கவேண்டும். மாநிலத்திலேயே தட்டலக்காடு பள்ளி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இதற்கு காரணம் அந்த பள்ளி தரமான கல்வியை வழங்கியதால்தான். அனைத்து பள்ளிகளும் இதேபோன்று செயல்படவேண்டும். இதற்காக ஆசிரியர்கள் கடுமையான உழைக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மே 16-ந் தேதி பள்ளி திறப்பு
இதை தொடர்ந்து பேசிய பள்ளிக் கல்வித்துறை மந்திரி பி.சி நாகேஷ் கூறியதாவது:-
மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இன்றைய கல்வியின் மறுமலர்ச்சிக்கு மத்திய அரசு பாராட்டுகளை தெரிவித்துள்ளது. ஒன்பது மாதம் வழங்கப்படும் கல்விகள், மூன்று பிரிவாக பிரித்து கற்றுக்கொடுக்கப்படும். மேலும் மாணவர்களிடையே எண் கணித அறிவை மேம்படுத்துவதும், பாடத்திட்டத்தை குறைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று குறித்து பலர் பயப்படுகின்றனர்.
தற்போது மாநிலத்தில் எந்த பாதிப்பும் இல்லை. திட்டமிட்டப்படி கோடை விடுமுறை முடிந்த பின்னர் மே 16-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும். அப்போது பாட புத்தகங்கள் வழங்கப்படும். மாணவர்களுக்கு ஆங்கிலப்புலமை தேவைப்படுகிறது. இந்த ஆண்டில் இருந்து ஆங்கிலப்புலமை மேம்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும். இதற்கான பயிற்சி வழங்க அனுபவமிக்க 27 ஆயிரம் ஆசிரியரை தேர்வு செய்துள்ளோம். எஸ்.எஸ்.எல்.சி தேர்வு சுமூகமாக நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்வு முடிவுகள் மே 3-வது வாரம் வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story