பறவைகளுக்கு தண்ணீர், இரை வைக்கும் தன்னார்வலர்கள்
வெயிலில் இருந்து பறவைகளை பாதுகாக்கும் வகையில் தேனியை சேர்ந்த தன்னார்வல இளைஞர்கள் சிலர் பறவைகளுக்கு தண்ணீர், இரை வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி:
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அக்னி நட்சத்திர வெயிலும் தொடங்கி உள்ளதால் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த கடும் வெயிலில் இருந்து பறவைகளை பாதுகாக்கும் வகையில் தேனியை சேர்ந்த தன்னார்வல இளைஞர்கள் சிலர் பறவைகளுக்கு தண்ணீர், இரை வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தன்னார்வலர் குழுவினர் தேனி என்.ஆர்.டி. நகர், கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலைய பூங்கா, ரெயில் நிலையம், தொழிற்பேட்டை ஆகிய இடங்களில் மரங்கள், கட்டிட சுவர்களில் பறவைகளுக்கு தண்ணீர், இரை வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்காக சல்லடை போன்ற மின்விசிறி மூடியில் தண்ணீர் பாட்டிலை கட்டி அதற்குள் இரையையும், பிளாஸ்டிக் டப்பா வைத்து அதில் தண்ணீர் ஊற்றியும் வைத்துள்ளனர். இந்த பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் கூறுகையில், "கோடை வெயிலால் மனிதர்களுக்கே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகள் எங்கேயும் பறவைகள் தண்ணீர் குடிப்பதற்காக வசதிகள் எதுவும் இல்லை. இதனால், பறவைகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக கல்லூரி மாணவர்கள், பட்டதாரி இளைஞர்கள் இணைந்து இந்த களப்பணியை தொடங்கி உள்ளோம். 3-வது ஆண்டாக இவ்வாறு செய்து வருகிறோம். பருவமழைக்காலம் தொடங்கும் வரை பறவைகளுக்கு தண்ணீர், இரை வைக்க உள்ளோம். இது எங்களுக்கு மன நிறைவை கொடுக்கிறது" என்றனர்.
Related Tags :
Next Story