பால்கரில் தொழிலாளர் சங்கத்தினர் நடத்திய கும்பல் தாக்குதலில் 19 போலீசார் காயம்
பால்கரில் தொழிலாளர் சங்கத்தினர் நடத்திய கும்பல் தாக்குதலில், 19 போலீசார் காயம் அடைந்தனர். மேலும் 12 போலீஸ் வாகனங்களின் கண்ணாடி உடைக்கப்பட்டன.
பால்கர்,
பால்கரில் தொழிலாளர் சங்கத்தினர் நடத்திய கும்பல் தாக்குதலில், 19 போலீசார் காயம் அடைந்தனர். மேலும் 12 போலீஸ் வாகனங்களின் கண்ணாடி உடைக்கப்பட்டன.
நீண்டகால பிரச்சினை
பால்கர் மாவட்டத்தில் உள்ள பொய்சர் நகர் பகுதியில் இரும்பு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில், தொழிலாளர் சங்கம் தொடர்பான பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அந்த தொழிற்சாலையில் வழக்கம்போல் பணிகள் நடைபெற்று வந்தது.
அப்போது திடீரென தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள், தொழிற்சாலைக்குள் அதிரடியாக நுழைந்தனர். அவர்கள் அங்கு பணியில் இருந்த சில ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்கள்.
மேலும் அங்கிருந்த பொருட்களை சூறையாடி கபளீகரம் செய்தனர்.
கல் வீச்சு
இதற்கிடையே, தொழிலாளர் சங்கத்தினரின் வன்முறை வெறியாட்டம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீஸ் படையினர் விரைந்து வந்தனர். போலீசார் அங்கு வந்ததை பார்த்ததும், அந்த கும்பல் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியது.
இதில், 19 போலீசார் காயம் அடைந்தனர். மேலும், அவர்கள் வந்த 12 போலீஸ் ஜீப்புகளின் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது.
27 பேர் கைது
இருப்பினும், போலீசார் போராடி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 27 பேரை கைது செய்தனர்.
அவர்கள் மீது கலவரத்தில் ஈடுபடுதல், கிரிமினல் சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதன் காரணமாக, அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுப்பதற்காக, தொழிற்சாலை வளாகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story