திண்டிவனம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணி கலெக்டர் மோகன் ஆய்வு
திண்டிவனம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணி கலெக்டர் மோகன் ஆய்வு
திண்டிவனம்
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் நடைபெற்று வருகிறது. இதை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாதாள சாக்கடை திட்டப்பணியை மேற்கொள்ளும் தொடர்புடைய நிறுவனத்தினர் மற்றும் அலுவலர்களிடம் பணிகளை குறித்த காலத்திற்குள் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, திண்டிவனம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2022-ம் ஆண்டு ரூ.268 கோடி மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு 30.11.2022 அன்று கழிவு நீர் சேகரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது 39.78 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. அடுத்த ஆண்டு(2023) நவம்பர் மாதம் பணியை முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் திண்டிவனம் நகராட்சி தூய்மையான நகரமாக திகழும் என்றார்.
தொடர்ந்து கழிவு நீர் சேகரிப்பு பணிகள் நடைபெறும் தீர்த்த குளம், திருவள்ளுவர் நகர், அவரப்பாக்கம், அகழி குளம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கழிவு நீர் உந்து நிலையம் அமைக்கும் பணிகளையும் கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திண்டிவனம் சப்-கலெக்டர் அமித், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் அன்பழகன், உதவி நிர்வாக பொறியாளர் மாரியப்பன், திண்டிவனம் தாசில்தார் வசந்த கிருஷ்ணன், நகராட்சி ஆணையர்(பொறுப்பு) தனபாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story