கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் அசானி புயல் எதிரொலி காரணமாக கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
கடலூர் முதுநகர்,
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை புயலாக வலுப்பெற்றது. இதற்கு ‘அசானி' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று நள்ளிரவில் தீவிரம் அடைந்தது. ‘அசானி' புயல் உருவானதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்த அசானி புயல் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை வடக்கு ஆந்திரா-ஒடிசா கடற்கரையையொட்டிய மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக்கூடும். அதன்பிறகு வடக்கு-வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரையையொட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. கடலூர் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும் கம்பத்தில், வழக்கமான பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், அதன் அருகில் சவுக்கு கம்பங்கள் கட்டப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story