புதுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து புகை மூட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதி


புதுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து புகை மூட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதி
x
தினத்தந்தி 8 May 2022 10:42 PM IST (Updated: 8 May 2022 10:44 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதில் புகை மூட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

புதுக்கோட்டை:
குப்பை கிடங்கு
புதுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கு சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் திருக்கட்டளையில் அமைந்துள்ளது. கடந்த 1959-ம் ஆண்டு முதல் குப்பை கிடங்கு இந்த இடத்தில் செயல்பட்டு வருகிறது. நகராட்சியில் 42 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்படுகிறது. இங்கு குப்பைகள் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு கிடப்பதால் அவை மலை போல குவிந்து காணப்படுகிறது.  மக்கும், மக்காத குப்பைகளை தரம்பிரித்து பயோனிங் முறையில் மாற்றம் செய்யவும் ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இந்த குப்பை கிடங்கில் அவ்வப்போது தீ விபத்து ஏற்படுவது வழக்கம். இதனால் குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றவோ அல்லது நிரந்தர தீர்வு காண கோரி அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தீ பரவியது
இந்த நிலையில் குப்பை கிடங்கில் கிழக்குப்பகுதியில் இன்று காலை 11.30 மணிக்கு மேல் லேசாக தீப்பிடித்துள்ளது. இந்த தீ மளமளவென பிடித்து பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ மேலும் பரவாமல் தடுக்கும் பணியை மேற்கொண்டனர். 
 இதற்கிடையில் மலைபோல குவிந்து கிடந்த குப்பை மேடுகளில் தீ பரவலாக பரவியது. மேலும் அதில் இருந்து வெளியான புகையால் புகை மூட்டம் ஏற்பட்டது. திருக்கட்டளையை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் இந்த புகை பரவியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். கண் எரிச்சல் ஏற்பட்டதோடு, சுவாசிப்பதில் மூச்சுத்திணறல் சிலருக்கு ஏற்பட்டது.
சாலை மறியல்
இதற்கிடையில் குப்பை கிடங்கு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கோரி அப்பகுதி பொதுமக்கள் ஆலங்குடி ரோட்டில் அசோக்நகர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் அரை மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்தது.
குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதை மாவட்ட கலெக்டர் கவிதாராமு பார்வையிட்டார். மேலும் தீயை அணைக்கும் பணியை துரிதப்படுத்தி உத்தரவிட்டார். அப்போது வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, நகராட்சி தலைவர் திலகவதி செந்தில்குமார், துணை தலைவர் லியாகத் அலி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தீயணைப்பு வாகனங்கள்
குப்பைகளில் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தண்ணீைர பீய்ச்சி அடித்தாலும், காற்று அடிக்கும் போது குப்பையில் உள்ள தனலில் இருந்து மீண்டும் தீ பிடித்தப்படி இருந்தது. இதனால் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர். 
தீயை அணைக்க 2-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது. தேவையான தண்ணீர் நகராட்சி குடிநீர் தொட்டியில் இருந்து பெறப்பட்டது. தீயை அணைக்க நேற்று மாலை சுமார் 75 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடைபெற்றது.

Next Story