குழந்தைக்கு திடீரென உடல் நலம் பாதித்ததால் மனமுடைந்த தாய் விஷம் குடித்து தற்கொலை


குழந்தைக்கு திடீரென உடல் நலம் பாதித்ததால் மனமுடைந்த தாய் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 8 May 2022 10:43 PM IST (Updated: 8 May 2022 10:43 PM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை அருகே குழந்தைக்கு திடீரென உடல் நலம் பாதித்ததால் மனமுடைந்த தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லாததால் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது.

ஆனைமலை

ஆனைமலை அருகே குழந்தைக்கு திடீரென உடல் நலம் பாதித்ததால் மனமுடைந்த தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லாததால் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது.

கருத்து வேறுபாடு

கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த காளியாபுரத்தை சேர்ந்தவர் சிவ செல்வகுமார். விவசாயி. இவருடைய மனைவி சிவ காயத்ரி(வயது 28). இவர்களுக்கு ஆதித்விகான்(5) என்ற மகன் இருந்தான்.
கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிவ செல்வகுமாரை பிரிந்து தனது மகனுடன் சேத்துமடை அருகே உள்ள பெற்றோர் வீட்டில் சிவ காயத்ரி வசித்து வந்தார். 

மகனுக்கு உடல் நலக்குறைவு

இந்த நிலையில் ஆதித்விகானுக்கு கடந்த ஒரு ஆண்டாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அவன், இன்று காலையில் திடீரென வாந்தி எடுத்தான். மேலும் கை, கால் ஒரு பக்கமாக இழுத்துக்கொண்டதாக தெரிகிறது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த காயத்ரி, அவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லாமல் உறவினரை அழைக்க காளியாபுரத்துக்கு சென்றார். 

ஆனாலும் திடீரென மனம் மாறிய அவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து விஷம் குடித்தார். இதனால் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே காயத்ரி பரிதாபமாக உயிரிழந்தார்.

சோகம்

இதற்கிடையில் வீட்டில் கிடந்த ஆதித்விகானை யாரும் கவனிக்கவில்லை. இதனால் சிறிது நேரத்திலேயே அவனும் உயிரிழந்தான். இதையடுத்து அங்கு வந்த உறவினர்கள் அவன் இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story