தரமற்ற விதைகளை வினியோகித்தால் கடும் நடவடிக்கை விற்பனையாளர்களுக்கு விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை


தரமற்ற விதைகளை வினியோகித்தால் கடும் நடவடிக்கை விற்பனையாளர்களுக்கு விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 8 May 2022 5:15 PM GMT (Updated: 8 May 2022 5:15 PM GMT)

தரமற்ற விதைகளை வினியோகித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விற்பனையாளர்களுக்கு விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குனர் சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்


விழுப்புரம்

விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குனர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முளைப்புத்திறன்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் எதிர்வரும் காரீப் பருவத்தில் மானாவாரிப்பட்ட சிறுதானிய பயிர்களான சோளம், கம்பு, மக்காச்சோளம், தீவனச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயிகள் பெருமளவில் சாகுபடி செய்வர். மானாவாரி பட்டத்தில் விதைப்புக்கு போதுமான மழைப்பொழிவு இருக்கும்பட்சத்தில், விதைகளின் முளைப்புத்திறன் பாதிக்கப்படுவதில்லை. மழைப்பொழிவு சீராக இல்லாத நிலையில் மண்ணில் ஈரப்பதம் குறைவாக இருப்பின், விதைகளின் முளைப்புத்திறன் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
எனவே மானாவாரி சாகுபடி நடைபெறும் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் சோளம், கம்பு, மக்காச்சோளம், தீவனச்சோளம் ஆகிய பயிர் விதைகளில் அதிகபட்ச முளைப்புத்திறன் கொண்ட விதைக்குவியல்களை வினியோகிக்குமாறு விதை வினியோகஸ்தர்கள் மற்றும் விதை விற்பனையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தரமற்ற விதைகளை விற்றால் நடவடிக்கை

விதை வினியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள், விதை உற்பத்தியாளர்களிடமிருந்து உண்மை நிலை விதைக்குவியல்கள் பெறப்பட்டவுடன் குவியல் வாரியாக பணி விதை மாதிரி எடுத்தனுப்பி அவற்றின் முளைப்புத்திறனை அறிந்து அவற்றில் அதிகபட்ச முளைப்புத்திறன் கொண்ட விதைக்குவியல்களை மானாவாரிப்பகுதி விவசாயிகளுக்கு வினியோகித்தால் மானாவாரி பருவத்தில் விதைகளின் முளைப்புத்திறன் தொடர்பான பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
மேலும் அனைத்து விதை விற்பனையாளர்களும், தங்கள் நிறுவனத்தில் விதை இருப்பு மற்றும் விலை விவர பட்டியல் பலகை வைத்து பராமரிக்க வேண்டும். விதை கொள்முதல் செய்தமைக்கான கொள்முதல் பட்டியல், உண்மை நிலை விதைகளுக்கான பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகல், பதிவுச்சான்று, இருப்பு பதிவேடு மற்றும் விற்பனை பட்டியல் ஆகிய சட்டப்பூர்வமான ஆவணங்களை தவறாமல் பராமரிக்க வேண்டும். விதை வாங்கும் விவசாயிகளுக்கு உரிய படிவத்தில் விற்பனை பட்டியல், விவசாயியின் கையொப்பம் பெற்று வழங்கி நகலை பராமரிக்க வேண்டும். இவ்வாறு ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை பராமரிக்காத மற்றும் தரமற்ற விதைகளை வினியோகிக்கும் விதை உற்பத்தியாளர்கள், விதை விற்பனையாளர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story