கறம்பக்குடி பகுதியில் புளி விளைச்சல் அமோகம் விலை குறைந்ததால் பெண்கள் மகிழ்ச்சி


கறம்பக்குடி பகுதியில் புளி விளைச்சல் அமோகம் விலை குறைந்ததால் பெண்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 8 May 2022 11:08 PM IST (Updated: 8 May 2022 11:08 PM IST)
t-max-icont-min-icon

புளி விளைச்சல் அமோகம் நடைபெறுகிறது.

கறம்பக்குடி:
தமிழ்நாட்டு மக்களின் உணவு பழக்கத்தில் உப்பு, புளி, காரம் இன்றியமையாத இருக்கும். அதில் புளிப்பு சுவைக்காக பெரும்பாலும் புளி பயன்படுத்தபட்டு வருகிறது. மீன் குழம்பு, புளிசாதம், வத்தல் குழம்பு உள்ளிட்ட பல்வேறு உணவு பதார்த்தங்களுக்கு புளி முக்கிய தேவையாக உள்ளது. தமிழ்நாட்டில் சாலையோரங்களில் பெரும்பாலும் புளியமரங்களே உள்ளன. இந்த மரங்களில் இருந்து கிடைக்கும் புளியம்பழங்கள் தமிழக மக்களின் புளி தேவைக்கு ஓரளவு கைகொடுக்கிறது. இவைதவிர கிராம பகுதிகளில் தோப்பாகவும் புளியமரங்கள் வளர்க்கப்பட்டு வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே புளி மகசூல் கிடைக்கிறது. ஏப்ரல், மே மாதங்களில் புளி அறுவடை நடைபெறுகிறது. கடந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்ததால் கறம்பக்குடியில் உள்ள புளிய மரங்களில் தற்போது விளைச்சல் அதிகமாகி அறுவடை பணிகள் தீவிரமடைந்து உள்ளது. கறம்பக்குடி அருகே உள்ள புதுப்பட்டி, பல்லவராயன்பத்தை, ஆத்தியடிபட்டி, வாண்டான்விடுதி ஆகிய பகுதிகளில் புளி வியாபாரிகள் அதிகம் உள்ளனர். இவர்கள் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் விளைச்சல் காணும் புளியை கொள்முதல் செய்து வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர். தற்போது கொள்முதல் பணியும் மும்முரமாக நடந்துவருகிறது. வெளியூர்களில் இருந்து மொத்த வியாபாரிகள் கறம்பக்குடி பகுதிக்கு வந்து புளியை மூட்டை மூட்டையாக வாங்கி செல்கின்றனர். கடந்த ஆண்டு விதை உள்ள புளி கிலோ ரூ.80 முதல் 90-க்கும் விதை நீக்கிய புளி கிலோ ரூ.100 முதல் 120 வரை விற்பனையானது. ஆனால் தற்போது விளைச்சல் அதிகமானதால் விதை புளி ரூ.70-க்கும் விதை நீக்கியது ரூ.90-க்கும் விற்பனை ஆகிறது. விலை குறைந்து உள்ளதால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து கறம்பக்குடியை சேர்ந்த குடும்ப தலைவி ஆனந்தி கூறுகையில், ஒரு ஆண்டிற்கு தேவையான புளியை சீசன் நேரத்தில் வாங்கி வைப்பது வழக்கம். கடந்த ஆண்டுகளில் விலை அதிகமாக இருந்ததால் குறைவாகவே வாங்கினோம். தற்போது விலை குறைந்து இருப்பதால் தேவைக்கு வாங்கி வைத்து உள்ளோம் என தெரிவித்தார்.

Next Story