மின் கட்டணம் செலுத்துமாறு குறுந்தகவல் அனுப்பி டாக்டரிடம் ரூ.9 லட்சம் மோசடி- மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 8 May 2022 5:54 PM GMT (Updated: 2022-05-08T23:24:28+05:30)

மின் கட்டணம் செலுத்துமாறு குறுந்தகவல் அனுப்பி டாக்டரிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீச்சி தேடி வருகின்றனர்.

மும்பை, 
மும்பை சாந்தாகுருஸ் மேற்கு பகுதியில் டாக்டர் ஒருவர் வசித்து வருகிறார். இவரது செல்போனுக்கு சமீபத்தில் குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் உடனடியாக மின் கட்டணத்தை செலுத்தவில்லை எனில் இணைப்பு துண்டிக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. டாக்டருக்கு மின் கட்டண பாக்கி எதுவுமில்லை. எனவே அவர் குறுந்தகவல் வந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசியவர் டாக்டருக்கு ஒரு மாத மின் கட்டண பாக்கி இருப்பதாகவும், அதை செலுத்த வேண்டும் என கூறினார். 
மேலும் மின் கட்டணம் செலுத்த உதவி செய்வதாக செயலி ஒன்றையும் பதிவிறக்கம் செய்ய சொன்னார்.
டாக்டரும் அவர் சொன்னதை கேட்டு செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்தார். இதை பயன்படுத்தி போனில் பேசிய மர்ம நபர் டாக்டரின் கிரெடிட், ஏ.டி.எம். கார்டு, வங்கி கணக்கில் இருந்து ரூ.9 லட்சத்தை அபேஸ் செய்தார். மறுநாள் அசல் மின் கட்டண பில் வந்த பிறகு தான் டாக்டருக்கு அவர் மோசடி செய்யப்பட்டதே தெரியவந்தது. 
இதையடுத்து அவர் மோசடி குறித்து சாந்தாகுருஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டரிடம் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டவரை தேடி வருகின்றனர்.

Next Story