தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
செய்தி எதிரொலி
மதுரை அவனியாபுரம் செல்லும் மெயின்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடுவில் குப்பை தொட்டி இருந்தது. இதனை அகற்றும் படி தினத்தந்தி புகார்பெட்டியில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக தற்போது குப்பை தொட்டி அகற்றப்பட்டது. இந்த செய்தியை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
கண்ணாயிரமூர்த்தி, அவனியாபுரம்.
நாய்கள் தொல்லை
விருதுநகர் மாவட்டம் சூலக்கரை மேடு தொடங்கி மாவட்ட கலெக்டர் வளாகம் செல்லும் சாலையில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது. இந்த நாய்கள் சாலையில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தியும், கடித்து துன்புறுத்தியும் வருகிறது. இதனால் மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் நாய்களால் விபத்துகளும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றது. பொதுமக்களுக்கு தொல்ைல தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொன்னுசாமி, சூலக்கரை.
ரேஷன் கடை வேண்டும்
மதுரை மாநகராட்சி 23-வது வார்டு கீழகைலாசபுரம் தாகூர் நகர் கண்மாய்கரை பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க நீண்ட தூரம் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் முதியோர்கள், பெண்கள் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி புதிய ரேஷன் கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்தனகுமார், கீழகைலாசபுரம்.
பஸ்நிலையம் தேவை
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை மையமாக கொண்டு பள்ளி, கல்லூரி, முக்கிய தலங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். ஆனால் சரியான போக்குவரத்து வசதி இன்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த பகுதியில் பஸ்நிலையம் அமைத்து பொது போக்குவரத்து வசதி செய்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்ைக எடுப்பார்களா?.
பொதுமக்கள், கிருஷ்ணன்கோவில்.
தடுப்பு சுவர் அமைக்கப்படுமா?
மதுரை பழங்காநத்தத்தில் இருந்து பெரியார் பஸ் நிலையம் செல்லும் சாலையின் நடுவே தடுப்புச்சுவர் இல்லை. இருசக்கர வாகனங்களில் செல்வோர் அதிக வேகத்தில் சாலையில் பயணிக்கின்றனர். இதனால் சிறு,சிறு விபத்துகள் அவ்வப்போது ஏற்படும் நிலை உள்ளது. எனவே இந்த சாைலயின் நடுவில் தடுப்புச்சுவர் அமைத்து, வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
முகேஷ், மதுரை.
Related Tags :
Next Story