வள்ளியூர் முருகன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்


வள்ளியூர் முருகன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்
x
தினத்தந்தி 9 May 2022 12:23 AM IST (Updated: 9 May 2022 12:23 AM IST)
t-max-icont-min-icon

வள்ளியூர் முருகன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது.

வள்ளியூர்:
சித்திரை திருவிழா
குகைக்கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உள்ள முருகன் கோவில் ஆகும். இந்த கோவிலில் நடக்கும் முக்கிய விழாக்களில் சித்திரை மாதம் நடக்கும் தேரோட்ட திருவிழா சிறப்புவாய்ந்ததாகும்.
இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், கும்பாபிஷேகம், பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வருதல் நடந்து வருகிறது. 
தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் நாளான நேற்று நடந்தது. இதனையொட்டி காலையில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் முருகபெருமான் உற்சவ சுவாமி, வள்ளி அம்பாளுடன் தேரில் எழுந்தருளினார்கள். அதனை தொடர்ந்து காலை 10.10 மணிக்கு திரளான பக்தர்கள் வடம் பிடித்து, முருகனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் நான்கு வீதிகளிலும் வலம் வந்து நிலைக்கு வந்து சேர்ந்தது. மதியம் விழா பூஜை வேலாண்டி தம்பிரான் அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. 
வீதிஉலா
இரவில் சுவாமி மற்றும் அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். இன்று (திங்கட்கிழமை) தீர்த்தவாரி நடக்கிறது. 
ஏற்பாடுகளை கோவில் தக்கார் மாரியப்பன், செயல் அலுவலர் ராதா மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வள்ளியூர் போலீஸ் உதவி சூப்பிரண்டு சமய்சிங் மீனா மேற்பார்வையில் வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

Next Story