ஒரே நாளில் 35,497 பேருக்கு கொரோனா தடுப்பூசி
குமரி மாவட்டத்தில் 652 இடங்களில் நடந்த மெகா முகாமில் 35 ஆயிரத்து 497 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் 652 இடங்களில் நடந்த மெகா முகாமில் 35 ஆயிரத்து 497 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா 4-வது அலை பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தமிழக அரசு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான ஒரே ஆயுதமான தடுப்பூசி செலுத்துவதும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் 15 லட்சத்து 11 ஆயிரத்து 200 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் 12 லட்சத்து 18 ஆயிரத்து 10 பேருக்கு முதற்கட்ட தடுப்பூசியும், 10 லட்சத்து 18 ஆயிரத்து 335 பேருக்கு 2-வது கட்ட தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது.
குமரி மாவட்டத்தில் இன்னும் சுமார் 3 லட்சம் பேர் வரை தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதால் அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மெகா முகாம்
இந்த நிலையில் விடுபட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.
அதே போல குமரி மாவட்டத்திலும் 652 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது. மேலும் மருத்துவக் குழுவினர் பல்வேறு இடங்களில் வீடு-வீடாக சென்று தடுப்பூசி செலுத்தினர். நாகர்கோவிலை பொறுத்த வரையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்த ஓரளவுக்கு கூட்டம் இருந்தது.
அதில் பெரும்பாலானோர் 2-வது கட்ட தடுப்பூசியை செலுத்தியதை பார்க்க முடிந்தது. குமரி மாவட்டம் முழுவதும் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 35 ஆயிரத்து 497 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
Related Tags :
Next Story