66 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
மதுரையில் நடந்த சிறப்பு முகாம்களில் 66 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மதுரை,
மதுரையில் நடந்த சிறப்பு முகாம்களில் 66 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தடுப்பூசி மெகா முகாம்
தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் மீண்டும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் நேற்று மெகா தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மதுரை மாவட்டத்திலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதன்படி, கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடந்தது. மதுரை அரசு மருத்துவ கல்லூரி, அரசு மருத்துவமனைகள், அனைத்து வாக்குசாவடி மையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடந்தது,
3415 இடங்கள்
நேற்று நடந்த சிறப்பு முகாம் குறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார் கூறுகையில், "மதுரை மாவட்டத்தில் 3,415 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடந்தது. இங்கு 1.750 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
நகர் மற்றும் புறநகர் பகுதியில் நடந்த சிறப்பு முகாம்களில் 65 ஆயிரத்து 690 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். முதல் தவணை தடுப்பூசியை 87 சதவீதம் பேரும், 2-ம் தவணை தடுப்பூசியை 61.8 சதவீதம் பேரும் செலுத்தி இருக்கிறார்கள். இதுபோல், பூஸ்டர் தடுப்பூசியை 50 ஆயிரம் பேர் செலுத்தி இருக்கிறார்கள்.
தடுப்பூசி செலுத்தாதவர்கள் யார், யார் என்பது குறித்து கணக்கெடுத்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு போன் செய்து 2-ம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தி வருகிறோம். மேலும், நோய் பரவல் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். எனவே மதுரை மாவட்ட பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்து, அனைவரும் சரியான நேரத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்" என்றார்.
Related Tags :
Next Story