அரசு பள்ளி ஆசிரியைகளின் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, பணம் கொள்ளை
உப்பிலியபுரம் அருகே அரசு பள்ளி ஆசிரியைகளின் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம ஆசாமிகள் 15 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். தப்பி ஓடிய அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
உப்பிலியபுரம்,
அரசு பள்ளி ஆசிரியைகள்
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம்-தம்மம்பட்டி செல்லும் சாலையில் மங்கப்பட்டி புதூர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 60), விவசாயி. இவருக்கு செல்வராணி (58), கலா (50) ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். இவர்கள் செங்கட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியைகளாக பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களுக்கு சுபாஷ் (32) என்ற மகன் உள்ளார். கல்லூரி பேராசிரியரான இவர் திருமணம் முடிந்து கோவையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
நகை-பணம் கொள்ளை
நேற்று முன்தினம் காலை தமிழரசன் வழக்கம்போல் தனது தோட்டத்திற்கு சென்றார். இதையடுத்து, செல்வராணி, கலா ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு சென்றுள்ளனர். மாலை அவர்கள் பணிகளை முடித்து வீடு திரும்பியபோது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. மேலும், பீரோவில் வைத்திருந்த நகை-பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து தப்பி சென்றது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பெரியமணி மற்றும் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து, மோப்ப நாய் லீலீ வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சிறிது தூரம் மோப்பம் பிடித்தபடி சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இதனைதொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
கண்காணிப்பு கேமராக்கள்
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாததை அறிந்த மர்ம ஆசாமிகள் வீட்டின் சுற்றுச்சுவரில் ஏறிக்குதித்து உள்ளே சென்று உள்ளனர். பின்னர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். மேலும், தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை விரைவில் பிடித்து விடுவோம் என்றனர்.
Related Tags :
Next Story