ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் டெண்டர்களை இறுதி செய்ய குழு


ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் டெண்டர்களை இறுதி செய்ய குழு
x
தினத்தந்தி 9 May 2022 2:39 AM IST (Updated: 9 May 2022 2:39 AM IST)
t-max-icont-min-icon

40 சதவீத கமிஷன் புகாரை தொடர்ந்து டெண்டர் பணிகளை இறுதி செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:40 சதவீத கமிஷன் புகாரை தொடர்ந்து டெண்டர் பணிகளை இறுதி செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு புகார் கடிதம்

கர்நாடகத்தில்  அரசு பணிகளை டெண்டர் எடுக்கும் ஒப்பந்ததாரர்களிடம் ஆளுங்கட்சியினர் 40 சதவீத கமிஷன் கேட்பதாக கர்நாடக மாநில ஒப்பந்ததாரர்கள் குற்றச்சாட்டு கூறியிருந்தனர். மேலும் இதுதொடர்பாக அவர்கள் பிரதமர் மோடிக்கு குற்றம்சாட்டி கடிதம் அனுப்பி இருந்தனர். அந்த கடிதத்தை பிரதமர் மோடி, கர்நாடக அரசுக்கு அனுப்பி இந்த புகார் கடிதம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். 

இதற்கிடையே பெலகாவி மாவட்டம் இண்டல்கா பகுதியைச் சேர்ந்த காண்டிராக்டரான சந்தோஷ் கே.பாட்டீல் (வயது 37) என்பவர் கடந்த மாதம் (ஏப்ரல்) 12-ந்தேதி உடுப்பியில் உள்ள ஒரு ஓட்டலில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.  முன்னதாக அவர் செல்போனில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் கர்நாடக கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரியான ஈசுவரப்பா வளர்ச்சி பணிகளை செய்த ஒப்பந்த தொகையை விடுவிக்க 40 சதவீதம் கமிஷன்  கேட்பதாக  பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார். 

மந்திரி ராஜினாமா

இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகள் மந்திரி ஈசுவரப்பாவை பதவி விலக கோரிக்கை விடுத்து வந்தன. மேலும் மாநிலம் முழுவதும் போராட்டமும் நடைபெற்றது. இதனால் கர்நாடக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. 
இதையடுத்து மந்திரி ஈசுவரப்பா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

டெண்டர் ஆய்வு குழு அமைப்பு

இந்த சூழ்நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, ரூ.50 கோடிக்கு மேற்பட்ட திட்ட பணிகளுக்கு வரும் டெண்டர்களை இறுதி செய்வதற்கு முன்பு ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார். 

இந்த நிலையில் கர்நாடக அரசு ஓய்வுபெற்ற கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி ரத்னகலா தலைமையில் டெண்டர் ஆய்வு குழு என்ற பெயரில் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.

உறுப்பினர்கள் நியமனம்

அந்த குழுவின் உறுப்பினர்களாக நீர்ப்பாசனத்துறை ஓய்வு பெற்ற இயக்குனரான என்ஜினீயர் குருபாதசாமி, மாநில கணக்கு தணிக்கைத்துறை ஓய்வு பெற்ற இயக்குனர் நந்தகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.  இந்த குழு, ரூ.50 கோடிக்கு மேற்பட்ட திட்ட பணிகளுக்கு வரும் டெண்டர்களை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்கும். அந்த அறிக்கை அடிப்படையில் அரசு டெண்டர் பணிகளை இறுதி செய்யும்.

Next Story