திற்பரப்பு பகுதியில் உலா வரும் கருங்குரங்கு
திற்பரப்பு பகுதியில் உலா வரும் கருங்குரங்கை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குலசேகரம்:
திற்பரப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கருங்குரங்கு ஒன்று தனியாக சுற்றி வருகிறது. குறிப்பாக உண்ணியூர்கோணம், விலவூர்கோணம், மாஞ்சக்கோணம், அஞ்சுகண்டறை, தும்பகோடு போன்ற பகுதிகளில் இதன் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பொதுவாக இந்த வகை கருங்குரங்கு அடர் காடுகளில் கடல் மட்டத்தில் இருந்து 1,500 அடி உயரத்திற்கு மேல் மட்டுமே வாழும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது நகர்ப்புற பகுதிகளில் சுற்றி வரும் கருங்குரங்கை பொதுமக்கள் அதிசயமாக பார்க்கிறார்கள். உருவத்தில் பெரியதாக இருக்கும் இந்த குரங்கு வீடுகளின் பின்புறங்களில் மரங்களுக்கு இடையே தாவும் போது பெண்கள், குழந்தைகள் அச்சப்படும் நிலை உள்ளது.
இந்தவகை குரங்குகள் லேகியம் உள்ளிட்ட மருந்துகள் தயாரிப்பதற்காக ஆங்காங்ேக வேட்டையாடப்படுகிறது. எனவே, இந்த குரங்கை பாதுகாக்கும் வகையில் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story