காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கொள்ளிடம் டோல்கேட்,
சாலை மறியல்
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கிளியநல்லூர் ஊராட்சியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி திருச்சி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
போலீசார் உறுதி
இதையடுத்து, அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் வானதியின் கணவர் சுரேஷ்குமார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் 3 நாட்கள் தான் தண்ணீர் வரவில்லை என்று கூறுங்கள். பல நாட்களாக தண்ணீர் வரவில்லை என்று சொல்வதில் நியாயம் இல்லை என்று கூறியதாக கூறப்படுகிறது. இதில், அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் பல நாட்களாக குடிநீர் கிடைக்கவில்லை. தெருக்களில் குப்பைகள் சரிவர அகற்றப்படுவதில்லை. சாக்கடைகள் தூர்வாரப்படவில்லை. மேலும் தெருவிளக்குகள் எரியாமல் இருள்சூழ்ந்து காணப்படுகிறது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டால் உரிய நடவடிக்கையும் இல்லை என ஆவேசமாக பேசினர். இதையடுத்து அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதனைத்தொடர்ந்து வாத்தலை போலீசார் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story