மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பால்குடம், தீச்சட்டி ஊர்வலம்


மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பால்குடம், தீச்சட்டி ஊர்வலம்
x
தினத்தந்தி 8 May 2022 9:19 PM GMT (Updated: 2022-05-09T02:49:53+05:30)

திருச்சி முதலியார்சத்திரம், பெரியமிளகுபாறை, புத்தூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி திரளான பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

திருச்சி, 
முத்துமாரியம்மன் கோவில்
திருச்சி, முதலியார்சத்திரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் 64-ம் ஆண்டு கரக உற்சவம் மற்றும் பூச்சொரிதல் விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று காலை காவிரி ஆறு அம்மா மண்டபம் படித்துறையில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி, அலகு குத்தியபடி கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். பின்னர் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று (திங்கட்கிழமை) மஞ்சள் நீராட்டு, விடையாற்றியுடன் விழா நிறைவடைகிறது.
புத்தடி மாரியம்மன் கோவில்
திருச்சி, பெரியமிளகுபாறையில் உள்ள புத்தடி மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி காவிரி ஆறு அய்யாளம்மன் படித்துறையில் இருந்து யானை மீது வைத்தபடியும், பக்தர்கள் தலையில் வைத்தபடியும் பால்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். மேலும் காவடி, தீச்சட்டியும் எடுத்து வந்தனர். 
இரவு உய்யகொண்டான் வாய்க்கால் அருகே மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லக்கில் மேளதாளங்கள் முழங்க அம்மன் கோவிலுக்கு வந்தடைந்தார்.
மகாமாரியம்மன் கோவில்
இதுபோல் திருச்சி புத்தூர் புதுத்தெருவில் உள்ள மகாமாரியம்மன் கோவிலில் 78-ம் ஆண்டு பால்குடம், காவடி விழா நேற்று தொடங்கியது. தொடக்க நாளான நேற்று அய்யாளம்மன் படித்துறையில் இருந்து பால்குடம், காவடி, கரகம், தீச்சட்டியுடன் பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டு புத்தூர் நகர்வலம் வந்து கோவிலை சென்றடைந்தனர்.
பின்னர் இரவு மகாமாரியம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. இன்று (திங்கட்கிழமை) இரவு திருவிளக்கு பூஜை நடக்கிறது.

Next Story