தமிழகத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு தான் திராவிட மாடலா?
தமிழகத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு தான் திராவிட மாடலா? என மத்திய மந்திரி எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
தென்தாமரைகுளம்:
தமிழகத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு தான் திராவிட மாடலா? என மத்திய மந்திரி எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
எல்.முருகன் பேட்டி
மத்திய மந்திரி எல்.முருகன் நேற்று குமரி மாவட்டத்துக்கு வருகை தந்தார். அங்கு தென்தாமரைகுளம் பகுதியில் பா.ஜனதா நிர்வாகி இல்ல திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திராவிட மாடலா?
கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் மின்மிகை மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் முறையான பராமரிப்பு இல்லை.
இதனால் ஏற்பட்ட மின்தடையால் பொருளாதாரத்தில் தமிழகம் கீழ் நிலைக்கு சென்றுள்ளது. பொதுமக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தி.மு.க. அரசு மக்கள் தான் காரணம் என்று மக்கள் மேல் பழி சுமத்துகிறார்கள். தமிழகத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு தான் திராவிட மாடலா?.
சாதிக்கொரு சுடுகாடு
திராவிட மாடல் ஆட்சி என்று தி.மு.க.வினர் அடிக்கடி கூறி வருகின்றனர். தமிழகத்தில் திராவிட மாடல் என்பதை தி.மு.க. விளக்க வேண்டும். 50 ஆண்டுகளாக திராவிட மாடலில் தான் தமிழ்நாட்டில் ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் இன்னும் சில கோவில்களில் தலித் மக்கள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது.
சாதிக்கொரு சுடுகாடு வைத்து கொள்வது தான் திராவிட மாடலா? இத்தனை குறைகளை வைத்துக்கொண்டு திராவிட மாடல் என்று தி.மு.க. எதை கூறுகிறார்கள் என தெரியவில்லை.
சமூக நீதியின் ஹீரோ
உண்மையான சமூக நீதியின் ஹீரோ பிரதமர் மோடிதான். ஏனென்றால் காங்கிரஸ் ஆட்சியில் தினந்தோறும் மீனவர் படுகொலை நடைபெற்றது. 600-க்கும் மேற்பட்ட துப்பாக்கிச்சூடு நடந்தது. பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு ஒரு முறை கூட துப்பாக்கிச்சூடு நடக்கவில்லை. தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பை உறுதிபடுத்தியுள்ளது. மேலும் கூடுதல் பாதுகாப்பு வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் பா.ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பா.ஜனதா நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முன்னதாக காலையில் தென்தாமரை குளத்திற்கு வந்த மத்திய மந்திரி எல்.முருகன் உள்பட அனைத்து பா.ஜனதா நிர்வாகிகளையும் தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப் மற்றும் பேரூராட்சி பா.ஜனதா நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.
Related Tags :
Next Story