‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 8 May 2022 10:00 PM GMT (Updated: 8 May 2022 10:00 PM GMT)

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குடிநீர் தொட்டி பராமரிக்கப்படுமா? 
அந்தியூர் தாலுகா பிரம்மதேசம் ஊராட்சிக்கு உள்பட்டது செம்புளிச்சாம்பாளையம் கிராமம். இங்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. அதற்கு பின்னர் எந்தவொரு பராமரிப்பு பணிகளும் நடைபெறவில்லை. இந்த தொட்டியில் இருந்து தான் அந்த பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஊரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள இந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யுவராஜா, செம்புளிச்சாம்பாளையம்.

தடுமாறும் வாகனங்கள்
ஈரோட்டில் இருந்து கொல்லம்பாளையம் செல்லும் வழியில் காளைமாடு சிலை அருகே முக்கிய வழித்தடமான ரெயில்வே பாலம் வருகிறது. இந்த பாலத்தின் கீழ் உள்ள இரு பாதைகளிலும் நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் பாதை தரமாக இல்லை. ஆங்காங்கே விட்டு விட்டு பராமரிப்பு பணி செய்துள்ளார்கள். இதனால் ரோடு ஒரு இடத்தில் மேடாகவும், ஒரு இடத்தில் பள்ளமாகவும் உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் தடுமாறுகிறார்கள். மாநகரின் முக்கிய வழித்தடம் இப்படி இருக்கலாமா?, அதிகாரிகள் கவனிப்பார்களா?
குறளின்பன், ஈரோடு.


ரோட்டை சீரமைக்க வேண்டும்
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட காசிபாளையம் மலைக்கோவில் செல்லும் வழியில் உள்ள தார்ரோடு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட பணிக்காக தோண்டப்பட்டது. ஆனால் பணி முடிந்து ரோடு சீரமைக்கப்படவில்லை. மேலும் மழை பெய்தபோது ரோட்டில் அரிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த வழியாக வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. அந்த ரோட்டின் ஓரத்தில் ஓடையும் செல்கிறது. உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், காசிபாளையம்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்
அம்மாபேட்டை பேரூராட்சி 1-வது வார்டு இந்திரா நகரில் உள்ள சாக்கடை வடிகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் ெசல்ல வழியின்றி தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளது. இதனால் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், அம்மாபேட்டை.

தெருவிளக்கு ஒளிருமா?
ஈரோடு கே.கே.நகர் தெற்கு 3-வது குறுக்கு தெருவில் உள்ள தெருவிளக்கு கடந்த ஒரு மாதமாக எரியவில்லை. ரெயில்வே தண்டவாளத்தை ஒட்டி தெருவிளக்கு அமைந்துள்ளது. இரவு நேரத்தில் இருளாக இருப்பதால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. பெண்கள் அந்த வழியாக செல்ல அச்சப்படுகிறார்கள். உடனே தெருவிளக்கை ஒளிர செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு.

மதுபிரியர்கள் அட்டூழியம்
கோபி நகராட்சி பஸ் நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளது. இங்கு மதுபிரியர்கள் அடிக்கடி நுழைந்து அங்குள்ள இருக்கையில் படுத்து தூங்கி வருகிறார்கள். இதனால் தாய்மார்கள் உள்ளே செல்ல அச்சப்படுகிறார்கள். பாலூட்டும் அறையில் மதுபிரியர்கள் புகுந்து அட்டூழியம் செய்வதை தடுக்க நகராட்சி நிர்வாகமும், போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணேசன், கோபி.

ஆபத்தான குழி 
ஈரோடு சென்னிமலை ரோட்டில் ஆபத்தான குழி உள்ளது. இந்த குழி கடந்த ஒரு ஆண்டாக உள்ளது. இந்த குழியில் பலர் விழுந்து விபத்தில் சிக்கி வருகிறார்கள். இந்த ரோடு மிகவும் முக்கியமான சாலை என்பதால் ஆபத்தான இந்த குழியை உடனே மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
குமாரசாமி, ஈரோடு.


Next Story