பெண் டாக்டர் மாடியில் இருந்து குதித்து சாவு: ஜாமீனில் வந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை மத்திகிரி அருகே சம்பவம்


பெண் டாக்டர் மாடியில் இருந்து குதித்து சாவு: ஜாமீனில் வந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை மத்திகிரி அருகே சம்பவம்
x
தினத்தந்தி 9 May 2022 10:43 AM IST (Updated: 9 May 2022 10:43 AM IST)
t-max-icont-min-icon

மத்திகிரி அருகே பெண் டாக்டர் மாடியில் இருந்து குதித்து இறந்தது தொடர்பாக கைதாகி ஜாமீனில் வந்த கணவர் வேதனையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மத்திகிரி:
மத்திகிரி அருகே பெண் டாக்டர் மாடியில் இருந்து குதித்து இறந்தது தொடர்பாக கைதாகி ஜாமீனில் வந்த கணவர் வேதனையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றிய விவரம் வருமாறு:-
பெண் டாக்டர் 
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் நந்தினி (வயது 24). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். இவரும், கெலமங்கலம் அருகே உள்ள போடிச்சிப்பள்ளியை சேர்ந்த முனியப்பா (27) என்பவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
முனியப்பா தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர்கள் ஓசூர் நவதியில் மாடி வீடு ஒன்றில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். முனியப்பா ஏற்கனவே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ஆவார். அவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த விவகாரம் 2-வது மனைவி நந்தினிக்கு தெரிய வந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 
மாடியில் இருந்து குதித்து தற்கொலை
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 2 பேரும் விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார்கள். அதன் பிறகும் முனியப்பாவுக்கும், நந்தினிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வேதனை அடைந்த நந்தினி கடந்த 25.3.2022 அன்று நள்ளிரவில் வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். 
இதுகுறித்த புகாரின் பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக முனியப்பாவை மத்திகிரி போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த 30.4.2022 அன்று ஜாமீனில் வெளியே வந்தார். இதன் பிறகு மன வருத்தத்தில் காணப்பட்ட முனியப்பா கடந்த 6-ந் தேதி ஓசூர் அச்செட்டிப்பள்ளியில் உள்ள தனது முதல் மனைவியின் வீடு அருகில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். 
பரிதாப சாவு
அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனியப்பா பரிதாபமாக இறந்தார். இது குறித்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண் டாக்டர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து தொடர்பாக கைதாகி ஜாமீனில் வந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story