சேலத்தில் பழுதடைந்த சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும்


சேலத்தில் பழுதடைந்த சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும்
x
தினத்தந்தி 9 May 2022 10:44 AM IST (Updated: 9 May 2022 10:44 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகரில் பழுதடைந்த சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும் என்று மேயர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சேலம்:-
சேலம் மாநகரில் பழுதடைந்த சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும் என்று மேயர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஓராண்டு சாதனை மலர்
தமிழக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி கடந்த ஓராண்டில் சேலம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், வளர்ச்சி பணிகள் குறித்து, ஓராண்டில் அரசின் அரும்பணிகளின் அணிவகுப்பு என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட சாதனை மலர் வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு அரசின் ஓராண்டு சாதனை மலரை வெளியிட்டார். ஆணையாளர் கிறிஸ்துராஜ், துணை மேயர் சாரதா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேயர் பேட்டி
தொடர்ந்து மேயர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம் மாநகராட்சியின் வளர்ச்சிக்காக ரூ.917 கோடியில் பல்வேறு திட்டங்கள், பாதாள சாக்கடை திட்டம், தங்கு தடையின்றி குடிநீர் வழங்குதல், போடிநாயக்கன்பட்டி, அல்லிக்குட்டை, மூக்கனேரி ஆகிய 3 ஏரிகளையும் மேம்படுத்துதல், சாலைகள் சீரமைப்பு, ெரயில்வே மேம்பாலம் போன்ற பணிகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகிறது.
பனமரத்துப்பட்டி ஏரி
பனமரத்துப்பட்டி ஏரியில் தற்போது கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் ஏரியின் கரைகளை பலப்படுத்துதல், ஆழப்படுத்துதல், ஏரியின் கரைகளில் சாலைகள் அமைத்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படும். 
ஏற்கனவே பனமரத்துப்பட்டி ஏரி மறுசீரமைப்பிற்காக சேலம் மாநகராட்சியால் ரூ.98 கோடிக்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. பனமரத்துப்பட்டி ஏரியிலிருந்து சேலம் மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மாநகராட்சியால் மேற்கொள்ளப்படும்.
பழுதடைந்த சாலைகள்
சேலம் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் பழுதடைந்த சாலைகள் அனைத்தும் தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது. மிக விரைவில் அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும். மாநகராட்சி பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கு தற்போது உள்ள தூய்மைப்பணியாளர்கள் போதுமானதாக இல்லை. எனவே அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று கூடுதலாக தூய்மை பணியாளர்கள் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மாநகராட்சி பகுதியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. மிக விரைவில் தெரு நாய்கள் கட்டுப்படுத்தப்படும். மாநகராட்சி பகுதியில் வரி வருவாயை பெருக்குவதற்கு தனிக்கவனம் செலுத்தப்படும். சேலம் டவுன் பகுதியில் ஈரடுக்கு பஸ் நிலையத்தின் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. விரைவில் பணிகள் முடிந்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு மேயர் ராமச்சந்திரன் கூறினார்.
புகைப்பட கண்காட்சி
இதையடுத்து அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் வகையில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சி மற்றும் எல்.இ.டி.திரையில் அரசின் சாதனைகள் திரையிடுவதை மேயர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் மண்டலக்குழு தலைவர்கள் கலையமுதன், உமாராணி, தனசேகர், அசோகன், நிலைக்குழுத்தலைவர்கள், ஜெயக்குமார், குமரவேல், சாந்தமூர்த்தி, மஞ்சுளா, முருகன், மாநகர பொறியாளர் ரவி, மாநகர நல அலுவலர் யோகானந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story