தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்கள் கடத்தலை தடுக்கு கடும் நடவடிக்கை: போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்
தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்கள் கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் அதிகாரிகளை சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தி உள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்கள் கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் அதிகாரிகளை சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தி உள்ளார்.
ஆய்வு கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்ட மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும், ரவுடிகள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், கோர்ட்டு அலுவல்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.
கடும் நடவடிக்கை
அப்போது கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பேசுகையில், ‘மாவட்டம் முழுவதும் கஞ்சா, புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க அந்தந்த பகுதி போலீஸ் அதிகாரிகளும், போலீசாரும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவுடிகள் நடமாட்டத்தையும் ஒடுக்க வேண்டும்’ என அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையாளர் சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் முப்பிடாதி, மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு அரசு வக்கீல்கள், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கோபி, கார்த்திகேயன், இளங்கோவன், உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story