முதுமலை வனப்பகுதிக்கு இடம்பெயரும் வனவிலங்குகள்


முதுமலை வனப்பகுதிக்கு இடம்பெயரும் வனவிலங்குகள்
x
தினத்தந்தி 9 May 2022 7:16 PM IST (Updated: 9 May 2022 7:16 PM IST)
t-max-icont-min-icon

தொடர் மழையால் பசுமைக்கு திரும்பிய முதுமலை வனப்பகுதிக்கு வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன. அவற்றை சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.

கூடலூர்

தொடர் மழையால் பசுமைக்கு திரும்பிய முதுமலை வனப்பகுதிக்கு வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன. அவற்றை சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.

முதுமலை வனப்பகுதி

கூடலூர், முதுமலை வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வறட்சி நிலவி வந்தது. இதன் காரணமாக காட்டுயானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டது. 

மேலும் வனப்பகுதியில் தீ பரவும் அபாயம் காணப்பட்டது. இதையடுத்து காட்டு தீ பரவாமல் தடுக்க  வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன்படி கூடலூர், முதுமலை கரையோரம் தீ தடுப்பு கோடுகள் அமைத்தனர். மேலும் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் எளிதில் தீ பிடிக்கக்கூடிய பொருட்களை வனப்பகுதியில் வீசக்கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டது. 

திரும்பி வரும் வனவிலங்குகள்

இந்த நிலையில் கூடலூர், முதுமலை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வறட்சி நீங்கி வனப்பகுதி பசுமையாக காணப்படுகிறது. மேலும் முதுமலையில் உள்ள நீர்நிலைகளிலும் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு பசுந்தீவனம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு உள்ளது. 

மேலும் பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்ற வனவிலங்குகள் மீண்டும் முதுமலைக்கு திரும்பி வருகிறது. குறிப்பாக மான்கள், காட்டெருமைகள், காட்டுயானைகள் முதுமலை வனத்தில் அதிகளவில் காணப்படுகிறது. அவை சாலையோரங்களில் முகாமிட்டு மேயச்சலில் ஈடுபடுவதை காண முடிகிறது. அவற்றை சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர். மேலும் காட்டுத்தீ அபாயம் நீங்கி உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

3 ஆண்டுகளாக காட்டுத்தீ இல்லை

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
வறட்சியான காலங்களில் வனப்பகுதியில் காட்டுத்தீ பரவி விடும். ஒவ்வொரு ஆண்டும் காட்டுத்தீயால் பெரும் சவால் ஏற்பட்டு வந்தது. பொது முடக்கத்தால் சுற்றுலா பயணிகள் வர தடை விதிப்பு, தொடர் மழை காரணமாக 3 ஆண்டுகளாக முதுமலை, கூடலூர் வனப்பகுதியில் காட்டு தீ பரவவில்லை. இதன் மூலம் காடுகள் பாதுகாக்கப்பட்டு உள்ளது. இது தொடர சுற்றுலா பயணிகள் வனத்துறைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story