மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 1¼ லட்சம் பேருக்கு சிகிச்சை
நீலகிரி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 1¼ லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 1¼ லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.
மலர் வெளியீடு
நீலகிரி மாவட்டத்தில் அரசு துறைகள் மூலம் கடந்த ஓராண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவிகள் குறித்து செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தயாரித்த சாதனை மலரை கோத்தகிரி நேரு பூங்காவில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி, நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோர் வெளியிட்டனர்.
அதன்பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி ஆகிய திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 1,974 பேருக்கு தொற்றா நோய் கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.
பராமரிப்பு உதவித்தொகை
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 16 முகாம்கள் நடத்தி 6136 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. சமூக நலத்துறை மூலம் எஸ்.எஸ்.எல்.சி. முடித்த 270 ஏழை பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் திருமண உதவித்தொகை, தலா 2.16 கிராம் தங்க நாணயம், பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்த 330 ஏழை பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் திருமண உதவித்தொகை, தலா 2.64 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2,389 பேருக்கு ரூ.4.74 கோடியில் பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாடு திட்டம் 2021-22-ன் கீழ் ரூ.10.27 கோடியில் 11 பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021-22-ன் கீழ் 11 கிராம ஊராட்சிகளை தேர்வு செய்து, அங்கு ரூ.18 லட்சத்தில் புணரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
மருத்துவ உபகரணங்கள்
பொதுப்பணித்துறை சார்பில் ரூ.37.79 கோடியில் காக்காத்தோப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிட பணிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்புக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.3.04 கோடியில் ஊட்டியில் வருவாய் கோட்ட அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. ரூ.3.48 கோடியில் ஊட்டி தாசில்தார் அலுவலகம் கட்டப்பட்டது.
ரூ.2.73 கோடியில் நஞ்சநாடு கிராமத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதி கட்டி முடிக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து கோத்தகிரியை சேர்ந்த 3 பேருக்கு மருத்துவ உபகரணங்களை கலெக்டர் அம்ரித் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஷிபிலா மேரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சையத் முகமத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story