விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்


விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 9 May 2022 7:25 PM IST (Updated: 9 May 2022 7:25 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டியப்பனூர் அணைக்கட்ட இடம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு கேட்டு குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

திருப்பத்தூர்

ஆண்டியப்பனூர் அணைக்கட்ட இடம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு கேட்டு குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

குறைதீர்வு நாள் கூட்டம்

திருப்பத்தூ மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனு அளித்தனர். மொத்தம் 301 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

ஆண்டியப்பனூர் அணை கட்ட இடம் கொடுத்்த விவசாயிகள் 20 பேர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

இழப்பீடு வழங்க வேண்டும்

ஆண்டியப்பனூர் கிராமத்தில் கடந்த 1997-ம் ஆண்டு ஆண்டியப்பனூர் அணை கட்டப்பட்டது. இத்திட்டத்துக்காக ஆண்டியப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த 20 விவசாயிகளின் சுமார் 30 ஏக்கர் விவசாய நிலத்தை அரசு கையகப்படுத்தியது. இதற்கான இழப்பீடு வழங்குவதாக அப்போது தமிழக அரசு தெரிவித்தது. கடந்த 2007-ம் ஆண்டு ஆண்டியப்பனூர் அணை திறக்கப்பட்டது.

ஆனால் அணைகட்டுவதற்கு இடம் அளித்த 20 விவசாய குடும்பங்களுக்கு சேர வேண்டிய இழப்பீடு தொகையை தமிழக அரசு 22 ஆண்டுகள் ஆகியும் இதுவரை வழங்கவில்லை. அந்த இடங்களுக்கான நில பட்டா, சிட்டா அடங்கல் எங்கள் பெயரிலேயே உள்ளது. 

மீன்பிடிக்க...

இந்தநிலையில், ஆண்டியப்பனூர் அணை நீர்ப்பிடிப்புப்பகுதியில் பொதுப்பணித்துறையினர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் மீன்வளம் மற்றும் மீனவர் நல வாரியம் மூலம் மீன்பிடிக்க ஏலம் விட்டு வருகின்றனர். எங்களுக்கு சொந்தமான நிலத்தில் எங்களால் விவசாயம் செய்ய முடியவில்லை என்பதால் மீன் பிடிக்க எங்களுக்கு அனுமதி கேட்டோம். ஆனால், பொதுப்பணித்துறையினர் எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. மேலும் எங்களுக்கு சேர வேண்டிய குத்தகை தொகையை முறையாக வழங்குவதில்லை. எங்கள் நிலத்துக்கு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

அரசு கேட்டுக்கொண்டதின்பேரில் எங்களது பட்டா நிலத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் தந்தோம். தற்போது, விவசாயமும் செய்ய முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உண்ண உணவில்லாமல் கஷ்டப்படுகிறோம். எங்கள் நிலையை பொதுப்பணி, வருவாய்த்துறையினர், சப்-கலெக்டர், தாசில்தார் என பலரிடம் மனு அளித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, 20 விவசாய குடும்பத்துக்கு சேர வேண்டிய இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில்க கூறி உள்ளனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட கலெக்டர் இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர;த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story