இன்று பூண்டி ஏரிக்கு சென்றடைய வாய்ப்பு: கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லையை வந்தடைந்தது

கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர் நேற்று காலை தமிழக எல்லையை வந்தடைந்தது. தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் உள்ளிட்டோர் மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர்.
பூண்டி ஏரி
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம். கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு வருடந்தோறும் தமிழகத்துக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., நீரும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரையும் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விடப்பட வேண்டும். கடந்த செப்டம்பர் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த பலத்த மழைக்கு பூண்டி முழுவதுமாக நிரம்பியது. இதனையடுத்து கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஜனவரியில் பெற வேண்டிய தண்ணீர் தரப்படவில்லை. இந்நிலையில் கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரி நீர்மட்டம் குறைந்து வருகிறது.
தண்ணீர் திறப்பு
இதனைக் கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த மாதம் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர். அதனை ஏற்று கடந்த 5-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆரம்பத்தில் வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது அதன்பின்னர் தண்ணீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த தண்ணீர் 152 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து நேற்று 11 மணிக்கு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்து அடைந்தது. வினாடிக்கு 50 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், கும்மிடிப்பூண்டி தொகுதி எம்.எல்.ஏ. டி.ஜே.கோவிந்தராஜன், பூந்தமல்லி எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி ஆகியோர் சிறப்பு பூஜை நடத்தி மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர்.
குடிநீர் தேவை பூர்த்தி
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.222 டி.எம்.சி. ஆகும். தற்போது 7.666 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. சென்னை நகர மக்களின் ஒரு மாத குடிநீர்த் தேவை 1 டி.எம்.சி. ஆகும். அதன்படி இந்த ஆண்டு கடைசி வரை ஏரிகளில் உள்ள நீரை கொண்டு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யலாம்.
நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தில்லைக்கரசி, உதவி செயற்பொறியாளர் சண்முகசுந்தரம், உதவிப் பொறியாளர்கள் பிரதிஷ், சதீஷ், ஊத்துக்கோட்டை தாசில்தார் ரமேஷ், தி.மு.க. தலைமை செயற்குழு ஜெ.மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் அபிராமி குமரவேல், ஏ.வி.ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகர், சக்திவேல், ரவி, முரளி, ஊத்துக்கோட்டை பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத் துணைத்தலைவர் குமரவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இன்று சென்றடையும்
தமிழக எல்லைக்கு வந்தடைந்த கிருஷ்ணா நீர் 25 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து பூண்டி ஏரிக்கு இன்று (திங்கட்கிழமை) காலை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 27.95 அடி ஆக பதிவாகியது. 1.310 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதேபோல் சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 13 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
Related Tags :
Next Story