கொடைக்கானலில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் ஐகோர்ட்டு நீதிபதி துரைசாமி திறந்து வைத்தார்
கொடைக்கானலில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாமை ஐகோர்ட்டு நீதிபதி துரைசாமி திறந்து வைத்தார்.
கொடைக்கானல்:
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானல் பகுதியில் தற்போது ‘குளு குளு’ சீசன் தொடங்கி உள்ளது. இதனை அனுபவிப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். அவர்களுடைய குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு சீசன் காலத்தில் சுற்றுலா இடமான பிரையண்ட் பூங்கா எதிரே இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் செயல்படும்.
அதன்படி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கொடைக்கானல் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் பிரையண்ட் பூங்கா எதிரே இன்று முதல் செயல்பட தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி ஜமுனா தலைமை தாங்கினார். மாவட்ட இலவச சட்டப்பணிகள் குழு செயலாளர் பாரதிதாசன் முன்னிலை வகித்தார். கொடைக்கானல் நீதிபதி கார்த்திகேயன் வரவேற்றார். இதில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி துரைசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சட்ட விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கும், சாலையோர கடைகளுக்கும் சென்று வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ. மோகன், நகராட்சி ஆணையாளர் நாராயணன், துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் வக்கீல்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த முகாம் சீசன் காலம் வரை செயல்படும் எனவும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்களது குறைகளை இம்முகாமில் தெரிவித்து இலவசமாக தீர்வு காணலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story