நாகையில், விசைப்படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் மும்முரம்
மீன்பிடி தடைக்காலத்தையொட்டி விசைப்படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்
நாகப்பட்டினம்:
மீன்பிடி தடைக்காலத்தையொட்டி விசைப்படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மீன்பிடி தடைக்காலம்
மீன்களின் இனப்பெருக்ககாலத்தை கருத்தில் கொண்டும், கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடனும், சென்னை காசிமேடு முதல் கன்னியாகுமரி வரை மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மீன்பிடி தடைக்காலத்தில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபடும் விசைப்படகுகள், இழுவை படகுகள் ஆகியவை மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது. ஆனால் சிறிய வகை படகுகள் அனுமதிக்கப்பட்ட தூரம் வரை சென்று மீன்பிடிக்கலாம்.மீன்பிடி தடைக்காலம் என்பதால் நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
சீரமைப்பு பணிகள்
தடைக்காலத்தையொட்டி மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை சீரமைக்கும் பணிகளில் முமு்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். படகில் வர்ணம் பூசுதல், படகுகளில் உள்ள துருப்பிடித்தவைகளை வெல்டிங் செய்து சரி செய்தல், என்ஜினை பழுது பார்த்தல், பலகைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாகை கடுவையாற்றில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகளில் மீனவர்கள் சீரமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு செல்லும் விசைப்படகு மீனவர்கள் ஒருவார காலம் கடலில் தங்கி மீன்பிடித்து வருவார்கள். அப்போது பிடிக்கப்படும் மீன்களை ஐஸ் வைத்து பதப்படுத்துவார்கள். இதனால் ஐஸ் தயாரிக்கும் பணியும் தீவிரமாக நடைபெறும். ஆனால் மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் ஐஸ் தயாரிக்கும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐஸ் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
50 ஆயிரம் பேர் வேலையிழப்பு
மீன்பிடித்து வரும் படகுகளில் இருந்து மீன்களை இறக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களும், படகுகளில் ஐஸ் கட்டிகள், டீசல் ஏற்றும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களும் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். நாகை மாவட்டத்தில் 1,000 விசைப்படகுகள் மீன்பிடி தடைக்காலத்தால் கடலுக்கு செல்லவில்லை.
இதனால் மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி சார்ந்த தொழிலாளர்கள் வேலையின்றி உள்ளனர். இந்த தடைக்காலத்தில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் பல கோடி ரூபாய் மதிப்பிலான மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story