பெண்ணின் குழந்தை இறந்ததால் உறவினர்கள் சாலை மறியல்
நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் குழந்தை இறந்ததால் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளிப்பாளையம்:
நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் குழந்தை இறந்ததால் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாயின் வயிற்றில் குழந்தை இறந்தது
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி செல்வவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிவேல். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ராஜீ (வயது30).
கர்ப்பமாக இருந்த ராஜீயை கடந்த 15 நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் ராஜீ வயிற்றில் இருந்த குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர் குழுவினர் உறவினர்களிடம் நேற்று தெரிவித்தனர்.
சாலை மறியல்
இதை தொடர்ந்து ராஜீயின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டாக்டர்களின் கவனக்குறைவால் தான் தாயின் வயிற்றில் இருந்த குழந்தை இறந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story