மந்திரிசபை மாற்றம் குறித்து விவாதிக்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நாளை டெல்லி பயணம்


மந்திரிசபை மாற்றம் குறித்து விவாதிக்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நாளை டெல்லி பயணம்
x
தினத்தந்தி 9 May 2022 9:05 PM IST (Updated: 9 May 2022 9:05 PM IST)
t-max-icont-min-icon

மந்திரிசபை மாற்றம் குறித்து விவாதிக்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நாளை (செவ்வாய்க்கிழமை) டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.

பெங்களூரு:

ஈசுவரப்பா ராஜினாமா

  கர்நாடக முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவி ஏற்றார். அப்போது அமைக்கப்பட்ட மந்திரிசபையில் 4 இடங்கள் மட்டும் காலியாக வைக்கப்பட்டன. இந்த நிலையில் காண்டிராக்டர் சந்தோஷ் பட்டீல் சமீபத்தில் கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் மந்திரியாக இருந்த ஈசுவரப்பா மீது 40 சதவீத கமிஷன் புகார் கூறிவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ஈசுவரப்பா பதவியை ராஜினாமா செய்தார்.

  இதனால் மந்திரிசபையில் காலியிடங்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரம் எழுந்துள்ளது. இதில் சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேட்டில் உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயணுக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதே போல் கல்லூரி உதவி பேராசிரியர் பணி நியமனத்திலும் ஊழல் நடந்திருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதிய மந்திரிசபை

  இவ்வாறு கர்நாடக பா.ஜனதா அரசு மீதான தொடர் ஊழல் குற்றச்சாட்டுகளால் அக்கட்சி மேலிட தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த விவகாரம் கட்சி தலைவர்களை கவலை அடைய செய்துள்ளது. அதனால் குஜராத்தை போல் மந்திரிசபையை ஒட்டுமொத்தமாக மாற்றிவிட்டு: புதிய மந்திரிசபை அமைப்பது குறித்து பா.ஜனதா மேலிடம் ஆலோசித்து வருகிறது.

  இந்த சூழ்நிலையில் மத்திய உள்துறை மந்திரி கடந்த வாரம் பெங்களூரு வந்திருந்தார். அப்போது, அவருடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மந்திரிசபை மாற்றம் குறித்து ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், மந்திரிசபை மாற்றம் குறித்து டெல்லி சென்று பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்திய பிறகு தகவல் தெரிவிப்பதாகவும், அதன் பிறகு டெல்லி வரும்படியும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியதாக தெரிவித்தார். இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

முதலீட்டாளர்கள் மாநாடு

  அங்கு பல்வேறு மத்திய மந்திரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார். மேலும் அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். அதைத்தொடர்ந்து நாளை இரவு டெல்லி கர்நாடக பவனில் தங்கும் அவர் நாளை மறுநாள் (புதன்கிழமை) பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து மந்திரிசபை மாற்றம் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லியில் இருந்து திரும்பியதும், மந்திரிசபை மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பசவராஜ் பொம்மை டெல்லி செல்வதால் மந்திரி பதவி கனவில் இருக்கும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் மந்திரிசபையில் இருக்கும் சிலருக்கு தங்கள் பதவி பறிபோய் விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

பா.ஜனதா மேலிடம்

  முதல்-மந்திரி உள்பட கூண்டோடு மந்திரிசபை மாற்றப்படலாம் அல்லது முதல்-மந்திரி தவிர மந்திரிகள் அனைவரும் நீக்கப்படலாம் என்று இரு விதமான கருத்துகள் கூறப்படுகின்றன. பா.ஜனதா மேலிடம் எத்தகைய ஆச்சரியத்தை வழங்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Next Story