பெங்களூருவில் அரசு அதிகாரிகளுக்கு விடுதி; பசவராஜ் பொம்மை பணிகளை தொடங்கி வைத்தார்


பெங்களூருவில் அரசு அதிகாரிகளுக்கு விடுதி; பசவராஜ் பொம்மை பணிகளை தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 9 May 2022 9:11 PM IST (Updated: 9 May 2022 9:11 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் அரசு அதிகாரிகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய விடுதி கட்டிட பணிகளை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்.

பெங்களூரு:

தேவையான நிதி

  கர்நாடக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் பெங்களூரு வசந்த்நகரில் அரசின் உயர் அதிகாரிகளுக்கான விடுதி கட்டிட கட்டுமான பணிக்கு பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பூமி பூஜையை நிறைவேற்றினார். இதில் பொதுப்பணித்துறை மந்திரி சி.சி.பட்டீல், பி..சி.மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

  அரசில் பணியாற்றும் உயர் அதிகாரிளுக்காக விடுதி கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கு பூமி பூஜையை நிறைவேற்றி உள்ளேன். இந்த பணிகளை குறித்த காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். இந்த கட்டிடம் அனைத்து வசதிகளுடன் தரமான முறையில் கட்டப்படுகின்றன. இதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

விரைவாக நடவடிக்கை

  கலெக்டர்களின் மாநாட்டை நடத்தி, பணிகளை குறித்த காலக்கெடுவுக்குள், ஊழல் இன்றி, காலதாமதம் இன்றி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். மக்களுக்கு அரசின் திட்ட பயன்கள் விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

  நல்லாட்சி நிர்வாகத்தை வழங்க முயற்சி செய்து வருகிறேன். தவறு செய்யும் அதிகாரிகள் மற்றும் பணியில் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திலேயே அரசின் சேவைகள் கிடைக்க வேண்டும். அந்த பணியை முழுமையாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

  இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் ரவிக்குமார், முதல்-மந்திரியின் முதன்மை செயலாளர் மஞ்சுநாத் பிரசாத், பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் அனில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story