தந்தையின் உடலை கொண்டுவர மகள் மனு
மலேசியாவில் இறந்த தந்தையின் உடலை கொண்டுவரக்கூட வசதியில்லை என்று மகள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தார்.
ராமநாதபுரம்,
மலேசியாவில் இறந்த தந்தையின் உடலை கொண்டுவரக்கூட வசதியில்லை என்று மகள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தார்.
ஓட்டலில் வேலை
கீழக்கரை அருகே உள்ள கொத்தங்குளம் கிராமத்தை சேர்ந்த மதியழகன் என்பவரின் மகள் கஸ்தூரி (வயது19). இவர் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்து கண்ணீர் மல்க மனு அளித்தார். எனது தந்தை மதியழகன் கடந்த 10 ஆண்டுகளாக மலேசியா நாட்டில் ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக தகவல் வந்துள்ளது. எனது தந்தைதான் எங்கள் குடும்பத்தின் ஒரே வருவாய் மனிதர். எனது அக்கா திருமணமாகி எங்களுடன்தான் வசித்து வருகிறார். அவருடைய திருமணத்திற்கு வாங்கிய கடன் தொகையே இன்னும் கட்ட முடியவில்லை.
எனது தாய் அறுவை சிகிச்சை செய்து வேலை செய்ய முடியாமல் தவித்து வருகிறார். இந்தநிலையில் மலேசியாவில் இறந்த தந்தையின் உடலை பார்த்து கட்டிபிடித்து கதறி அழவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், அவரின் உடலை கொண்டுவர எங்களால் செலவழிக்க எந்த வழியும் இல்லை. எனவே, தந்தையின் உடலை அரசின் உதவியோடு கொண்டுவர நடவடிக்கை எடுங்கள். இல்லாவிட்டால் அவரின் உடலை அங்கேயே நல்ல முறைப்படி அடக்கம் செய்துவிடுங்கள்.
உறுதி
எங்கள் தந்தை 10 ஆண்டுகளாக வேலை பார்த்த நிறுவனத்திலும், அரசின் சார்பிலும் எங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நிவாரண நிதி பெற்று வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் மத்திய,மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
Related Tags :
Next Story