கோர்ட்டு வழக்குகளை விரைவாக முடித்தால் பிரச்aசினைகளுக்கு தீர்வு கிடைக்கும்
அனைத்துத் துறைகளிலும் உள்ள கோர்ட்டு வழக்குகளை விரைவாக முடித்தால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினாா்.
ராணிப்பேட்டை
அனைத்துத் துறைகளிலும் உள்ள கோர்ட்டு வழக்குகளை விரைவாக முடித்தால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினாா்.
ஆய்வு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்துத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
மாவட்ட நிலை அலுவலர்கள் கண்டிப்பாக இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதை அடுத்தவாரம் முதல் உறுதி செய்ய வேண்டும். பல்வேறு துறைகளில் கோர்ட்டு வழக்குகள் நிலுவையில் நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் வாரந்தோறும் கோர்ட்டு வழக்குகள் குறித்து அனைத்து துறைகளும் அறிக்கை அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அடுத்த வாரம் முதல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
தீர்வு கிடைக்கும்
வழக்குகளை விரைவாக முடித்தால் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆளுமை துறை சார்ந்த அலுவலர்கள் கோர்ட்டு வழக்குகளை நிலுவையில் வைத்துள்ளதை வாரம்தோறும் அறிக்கை சமர்ப்பித்து, அதற்கான மேல் நடவடிக்கை குறித்து தெரிவிக்க வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள், குழந்தை திருமணங்கள் தடுத்தல் இவற்றைக் கண்காணிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அப்பகுதிகளில் சென்று ஆய்வு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். அதற்காக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் துறை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், வருவாய் கோட்டாட்சியர்கள், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு குழந்தை திருமணங்கள் நடப்பதை தவிர்க்கவும், பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுத்து அதற்கு பின்னர் எடுத்த நடவடிக்கை விவரம் வழங்க வேண்டும். இதனை முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுத்தால் பிரச்சினைகள் குறையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story