கயத்தாறு அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
கயத்தாறு அருகே, மின்கம்பத்தில் ஏறி வேலை செய்த எலக்ட்ரீசியன் மின்சாரம் தாக்கி பலியானார். அவரது உடல் அந்த மின்கம்பத்தில் தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கயத்தாறு:
கயத்தாறு அருகே, மின்கம்பத்தில் ஏறி வேலை செய்த எலக்ட்ரீசியன் மின்சாரம் தாக்கி பலியானார். அவரது உடல் அந்த மின்கம்பத்தில் தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
எலக்ட்ரீசியன்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வெள்ளாளன்கோட்டை பஞ்சாயத்து சூரியமினிக்கன் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகையா. இவருடைய மகன் செல்லத்துரை (வயது 55). எலக்ட்ரீசியன்.
இந்தநிலையில் சூரியமினிக்கன் கிராமத்தில் உள்ள ஒருவருக்கு சொந்தமான மோட்டார் பம்புசெட் கிணற்றில் மின் ஒயர்கள் பழுதாகி இருந்தன. இதை சரிசெய்ய செல்லத்துைரயை அவர் அழைத்து இருந்தார். இதனால் செல்லத்துரை அந்த பகுதிக்கு நேற்று காைல 7 மணியளவில் சென்றார்.
மின்கம்பத்தில் ஏறி வேலை செய்தார்
அந்த மோட்டார் பம்புசெட் கிணறுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படும் டிரான்ஸ்பார்மர் அந்த பகுதியில் உள்ளது. அந்த கிணற்றுக்கும், டிரான்ஸ்பார்மர் அமைந்திருக்கும் பகுதிக்கும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.
அங்கு சென்ற செல்லத்துரை டிரான்ஸ்பார்மரை `ஆப்' (மின்வினியோகம் நிறுத்தம்) செய்தார். பின்னர் பம்புசெட் கிணறு பகுதியில் உள்ள மின்கம்பத்துக்கு வந்து அதில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தார்.
மின்சாரம் தாக்கி பலி
அப்போது, அந்த பகுதிக்கு வந்த மற்றொரு விவசாயி தனது தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அங்கு பம்புசெட்டை இயக்க முயன்றார். ஆனால், மின்சாரம் இல்லாததால் டிரான்ஸ்பார்மர் அமைந்திருக்கும் இடத்துக்கு வந்தார். அங்கு டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்சாரம் வினியோகம் நிறுத்தப்பட்டு இருப்பதை கண்டார்.
ஆனால், அரை கிலோ மீட்டர் தூரத்தில் மின்கம்பத்தில் ஏறி உட்கார்ந்து செல்லத்துரை வேலை செய்து கொண்டிருந்ததை அந்த விவசாயி கவனிக்கவில்லை. இதனால் அந்த விவசாயி, டிரான்ஸ்பார்மரை இயக்கினார். இதில், மின்கம்பத்தில் வேலை செய்து கொண்டிருந்த செல்லத்துரை மின்சாரம் தாக்கி பலியானார். அவருடைய உடல் மின்கம்பத்தில் தொங்கியபடி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
உறவினர்கள் கதறல்
இதுபற்றி தகவல் அறிந்ததும் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், பால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மின்சாரத்தை நிறுத்தி விட்டு செல்லத்துரையின் உடலை மின்கம்பத்தில் இருந்து கீழே இறக்கினர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து போன செல்லத்துரைக்கு சண்முகத்தாய் என்ற மனைவியும், செண்பகராஜ், அருண்ராம் ஆகிய மகன்களும், சாந்தி என்ற மகளும் உள்ளனர். செல்லத்துரை இறந்தது பற்றி அறிந்ததும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.
எலக்ட்ரீசியன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story