‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேறும், சகதியுமான சாலை
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் ராமச்சந்திரா நகரில் சுமார் 60 குடும்பங்கள் வசித்து வருகின்றது. ஆனால், இந்த பகுதியில் சரியான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. மேலும், சாலையும் முறையாக இல்லை. தற்போது பெய்த மழையால் இந்த சாலையானது சேறும், சகதியுமாக காணப்படுகிறது. எனவே, இந்த பகுதியில் அடிப்படை வசதிகளை சரிசெய்து, சாலையை சீரமைக்க வேண்டுகிறேன்.
ரமேஷ், ராமச்சந்திராநகர்.
பஸ்கள் முறையாக இயக்கப்படுமா?
நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் இருந்து மேலச்செவல் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு 14, 14 ஏ, 34 ஜி ஆகிய டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு ஆண்டாக இந்த பஸ்கள் முறையாக இயக்கப்படுவதில்லை. இதனால் இந்த பஸ்களை நம்பி இருக்கும் பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, இந்த பஸ்களை முறையாக இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாகுல் அமீது, மேலச்செவல்.
குப்பைகளால் சுகாதாரக்கேடு
பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கீழநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிரஸண்ட் நகர் குடியிருப்பு பகுதியில் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. ஆகவே, இந்த குப்பைகளை ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் கொட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சுலைமான், கிரஸண்ட் நகர்.
வாகன ஓட்டிகள் அவதி
தென்காசி மாவட்டம் சிவகிரி தேவர் சிலை முதல் தாலுகா அலுவலகம் வரையிலான சாலை மோசமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்
முனியசாமி, சிவகிரி.
குண்டும், குழியுமான சாலை
தென்காசி-அம்பை மெயின் ரோட்டில் முதலியார்பட்டியில் ரெயில்வே கிராஸிங் உள்ளது. இங்கு ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாளம் அருகில் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஒரு சிலர் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். வாகன ஓட்டிகளின் நலன் கருதி குண்டும், குழியுமாக உள்ள சாலைைய சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
திருக்குமரன், கடையம்.
தெருவில் தேங்கும் கழிவுநீர்
கடையம் அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டி பிள்ளையார்கோவில் தெருவில் வாறுகால் வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்குகிறது. இதன் காரணமாக கொசு தொல்லை, நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே, இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
சுரேஷ், சேர்வைக்காரன்பட்டி.
போக்குவரத்து நெருக்கடி
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் இருந்து கால்வாய் கிராமத்திற்கு பிரியும் சாலையின் அருகே அமைந்துள்ள பாலம் குறுகலாக உள்ளது. இந்த பாலம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. இதில் ஒரு வாகனம் சென்றால் எதிரே வரும் மற்ற வாகனங்கள் காத்திருந்து செல்ல வேண்டி உள்ளது. இதன் காரணமாக தினமும் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே, இந்த பாலத்தை இருவழி பாலமாக மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பெருமாள், கால்வாய்.
ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் சீரமைக்கப்படுமா?
சாயர்புரம் அருகே உள்ள செந்தியம்பலத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் பின்பகுதி கழிப்பறை தொட்டி உடைந்தும், கட்டிடத்தின் சுவர் பழுதடைந்தும் காணப்படுகிறது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க வேண்டுகிறேன்.
ஆனந்தராஜ், செந்தியம்பலம்.
Related Tags :
Next Story