மிதக்கும் பாலம் கடல் சீற்றத்தால் சேதம்
உடுப்பி மல்பே கடற்கரையில், 3 தினங்களுக்கு முன்பு பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்ட மிதக்கும் பாலம் கடல் சீற்றம் காரணமாக சேதமடைந்தது.
உடுப்பி:
முதல் மிதக்கும் பாலம்
உடுப்பி மாவட்டம் மல்பே கடற்கரை உள்ளது. வட கர்நாடகத்தின் முக்கிய சுற்றுலா மையமாக அந்த கடற்கரை திகழ்கிறது. தினமும் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அந்த கடற்கரைக்கு வந்து கடல் அழகை ரசித்து விடுமுறை நாட்களை கழித்து செல்கின்றனர்.
அவர்கள் கடலின் மேற்பரப்பில் மிதந்தபடி கடல் அழகை ரசிக்க ஏதுவாக மிதக்கும் பாலம் அமைத்து சுற்றுலா பயணிகளை ஈர்க்க கடற்கரை நிர்வாகம் திட்டமிட்டது.
அதன்படி ரூ.75 லட்சம் செலவில் மிதக்கும் பாலம் அமைக்கப்பட்டது. இந்த மிதக்கும் பாலம் 100 மீட்டர் நீளமும், 3.5 மீட்டர் அகலமும் கொண்டது. ஒரே நேரத்தில் 100 பேர் மட்டும் இந்த பாலத்தில் நடந்து செல்ல முடியும்.
பாலத்தில் நடந்து செல்லும் சுற்றுலா பயணிகள் யாரேனும் கடலுக்குள் தவறி விழுந்தால் அவர்களை மீட்பதற்காக 10 உயிர் காப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பாலத்தை கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரகுபதி பட் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். கர்நாடகத்தின் முதல் மிதக்கும் பாலம் இது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இதனால் அந்த பாலத்தின் சில பகுதிகள் சிதிலமடைந்தன. நேற்று காலையில் திடீரென அந்த பாலத்தின் ஒரு பகுதி கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு சேதமடைந்தது. அப்போது பாலத்தில் சுற்றுலா பயணிகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
தற்காலிகமாக மூடப்படுகிறது
இதுகுறித்து கடற்கரை நிர்வாகம் கூறியதாவது:-
கடந்த 2 நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் அலைகளின் வேகம் அதிகரித்துள்ளதால் இந்த சம்பவம் நடத்துள்ளது. பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை.
அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பு நாங்கள் அந்த பாலத்தை அகற்றிவிட்டோம். விரைவில் அந்த பாலத்தை மீண்டும் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவோம். தற்காலிகமாக இந்த பாலத்தை நாங்கள் மூடுகிறோம்.
இவ்வாறு நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது.
Related Tags :
Next Story