வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் காவலாளி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் காவலாளி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்
வேலூரை அடுத்த பாலம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதாகர் (வயது 37), காவலாளி. இவர் மனைவி, குழந்தையுடன் வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். சுதாகர் திடீரென கலெக்டர் அலுவலக போர்டிகோவில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். மேலும் அவர் தன்னையும், குடும்பத்தையும் காப்பாற்றும்படி கதறி அழுதார். இதைக்கண்ட போலீசார் சுதாகரை சமாதானப்படுத்தினர்.
பின்னர் அவரிடம் விசாரித்தனர். அப்போது சுதாகர், குடும்பத்தகராறில் சிலர் எனக்கும், மனைவிக்கும் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். மேலும் செல்போனில் மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு எங்கு இருக்கிறாய் என்று அடிக்கடி கேட்டு தொந்தரவு கொடுக்கிறார்கள். கொலை மிரட்டல் விடுத்த மற்றும் செல்போனில் தொந்தரவு கொடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்தேன். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் நான், மனைவி, குழந்தை பயத்துடனேயே வாழ்ந்து வருகிறோம். குடும்பத்தகராறில் கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து போலீசார் அவர்களை சத்துவாச்சாரி போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story