கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் திடீர் மறியல் போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் திடீரென சாலை மறியல் செய்தனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
கடலூர்
மறியல்
சிதம்பரம் வேங்கான் தெருவை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் திடீரென அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட புதுநகர் போலீசார் பார்த்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் நாங்கள், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான குருநமச்சிவாயர் இடத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகிறோம். இதற்காக கடந்த சில ஆண்டுகளாக வாடகை கொடுத்தாலும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ரசீது தருவதில்லை.
தள்ளு, முள்ளு
தற்போது நாங்கள் குடியிருந்து வரும் வீடுகளை பூட்டு போட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆகவே எங்கள் வீடுகளை காலி செய்யக்கூடாது. வாடகை தர தயாராக இருக்கிறோம். இது பற்றி கோட்டாட்சியர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடத்தி, எங்களுக்கு நீதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதை கேட்ட போலீசார், மறியலை கைவிடுமாறு அவர்களிடம் கூறினர்.
இருப்பினும் அவர்கள் விடாமல் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி தள்ளு, முள்ளு ஏற்பட்டது. பின்னர் அவர்களை சாலையோரம் போலீசார் அழைத்து வந்தனர்.
பெண் மயங்கி விழுந்தார்
அப்போது ஒரு பெண் திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் அவருக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். தொடர்ந்து 108 ஆம்புலன்சில் அவர் கொண்டு செல்லப்பட்டு, கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்கிடையில் மறியலை கைவிட்ட அவர்கள், மாவட்ட கலெக்டரிடம் இது பற்றி மனு அளித்து விட்டு புறப்பட்டு சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story