குளித்தலை ரெயில் நிலையத்தில் 2-வது நடைமேடை சரிந்து விழுந்து சேதம்
குளித்தலை ரெயில் நிலையத்தில் 2-வது நடைமேடை சரிந்து விழுந்து சேதம் அடைந்தது.
குளித்தலை,
ரெயில் நிலையம்
கரூர் மாவட்டம் குளித்தலை ரெயில் நிலையம் வழியாக திருச்சி மற்றும் கரூர் மார்க்கமாக செல்லும் பயணிகள், விரைவு ரெயில்கள் சென்று வருகின்றன. குளித்தலை ரெயில் நிலையத்தில் ஒரே சமயத்தில் இரண்டு ரெயில்கள் வரும்பொழுது அந்த ரெயில்கள் முதல் மற்றும் 2-வது நடைமேடைகளில் நிறுத்தப்படுவது வழக்கம்.
இந்த ரெயில் நிலையத்தில் பல்வேறு கட்டுமானப் பணிகள், நடைமேடைகளில் நீளத்தை அதிகரித்து தடுப்பு சுவர் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுபோல் இங்கு உள்ள 2-வது நடைமேடையின் கிழக்கு பகுதியின் நீளம் அதிகரிக்கப்பட்டு, சுற்றுச்சுவர் கட்டப்பட்டு நடைமேடை முடியும் இடத்தில் பெயர்ப்பலகையும் வைக்கப்பட்டது.
நடைமேடை சரிந்தது
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 வது நடைமேடையின் இறுதிப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகை மற்றும் நடைமேடை, சுற்றுச்சுவர் ஆகியவை மண்ணில் சரிந்து பக்கவாட்டில் உள்ள விளைநிலத்தில் விழுந்துவிட்டது. மேலும் இந்த நடைமேடையில் நீண்ட தூரத்திற்கு விரிசல் ஏற்பட்டுள்ளது. நடை மேடை அமைக்கும் பொழுது அதன் அடித்தளத்தை உறுதிப்படுத்தாமல் அவசரகதியில் நடைமேடை அமைத்ததாலேயே உறுதித் தன்மை இல்லாமல் நடைமேடை சரிந்து அப்பகுதி பள்ளம் ஆகிவிட்டதாக ரெயில் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
பகல் நேரங்களிலேயே இந்த நடைமேடை சரிந்து உள்ள பகுதி வழியாக பயணிகள் நடந்து செல்ல மிகுந்த அச்சமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் இரவு நேரங்களில் இந்த நடைமேடை வழியாக ரெயிலில் ஏறிச் செல்லும் பயணிகளும், ரெயிலில் இருந்து இறங்கும் பயணிகளும் மிகுந்த பயத்துடனேயே இந்த 2 வது நடைமேடை வழியாக நடந்து செல்லும் அவல நிலை இருக்கிறது.
கோரிக்கை
மேலும் பள்ளத்தில் விழுந்து பயணிகள் உயிரிழக்கக்கூடிய ஆபத்தான நிலையும் உள்ளது. அதுபோல உறுதியற்ற தன்மையில் இந்த நடைமேடை இருப்பதால் மீண்டும் நடை மேடை சரிந்து பயணிகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படக்கூடிய அபாயகரமான நிலையும் உள்ளது. இந்த 2 வது நடைமேடை சரிந்து விழுந்து பல மாதங்களாகியும் ரெயில்வே நிர்வாகம் எந்தவித பணிகளையும் அங்கு செய்யவில்லை. எனவே ரெயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு குளித்தலை ரெயில் நிலையத்தில் சேதமடைந்துள்ள மற்றும் விரிசல் ஏற்பட்டடு சரியும் நிலையில் உள்ள 2-வது நடைமேடை பகுதியை மீண்டும் சீரமைக்க ரெயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை பாதுகாப்பற்ற நிலையிலுள்ள 2-வது நடைமேடையில் எந்த ஒரு பயணிகள் ரெயிலையும் நிறுத்தாமல் இருப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் ரெயில்வே நிர்வாகம் எடுக்க வேண்டுமென ரெயில் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story