உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்கக்கோரி வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தினர் மனு அளித்தனர்.
கரூர்,
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி, கூட்டத்தில் 24 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூட்டத்தில் 283 மனுக்கள் பெறப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 43 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில், கரூர் மண்மங்கலம் வட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு கிராமம், பொன்நகர் ஊர்பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- எங்களது குடியிருப்பிற்கு அருகில் ஒருவர் கழிவு பஞ்சு நிரப்பும் கடை மற்றும் லாரி பட்டறை ஆகியவற்றை நடத்தி வருகிறார். அவ்வாறு அவர் நடத்தி வரும் பஞ்சு கடையின் கழிவு பஞ்சானது அருகில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பரவுவதால் சுற்றியுள்ள குடியிருப்புகளில் உள்ள பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சளி, ஆஸ்துமா மற்றும் பிற சுவாச பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆகையால் அதனை அகற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை
வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில், கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் அப்போதைய தமிழக அரசால் புறநகர் பஸ்நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த இடமானது கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு அருகாமையில் உள்ள பகுதியாகும். தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு, அந்த இடத்தில் புறநகர் பஸ்நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை கைவிடப்பட்டு, தற்போது அந்த இடத்தில் இலங்கை அகதிகள் முகாம் அமைக்க தமிழ்நாடு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு டெண்டர் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
உண்ணாவிரதம் நடத்த...
ஏற்கனவே இலங்கை அகதிகள் முகாம் அமைப்பதற்கு கரூர் வட்டம், கொடையூர் கிராமத்தில் உள்ள அரசு நிலத்தில் முகாம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்து அனுமதியும் வழங்கியுள்ளார்கள். ஆனால் தற்போது எவ்விதமான அடிப்படை மற்றும் அவசியமான காரணங்கள் எதுவும் இன்றி கரூர் மாநகராட்சியின் தேவைக்காக புறநகர் பஸ்நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் இலங்கை அகதிகள் முகாம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை அகதிகள் தங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள தோரணக்கல்பட்டி இடத்தில் புதியதாக அமைக்க வேண்டாம் என எங்களுடைய ஆட்சேபணையை தெரிவித்து மாவட்ட கலெக்டர் உள்பட அரசு அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளோம். ஆனால் வழங்கப்பட்ட மனுவிற்கு எவ்விதமான பதிலும் கொடுக்கப்படவில்லை. எனவே கரூர் தோரணக்கல்பட்டி கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாம் அமைக்க வேண்டாம் என்று எங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 13-ந்தேதி உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story