பல தலைமுறையாக பயன்படுத்திய பாதையை சீரமைக்க வேண்டும்
குரங்கணி மலைப்பகுதியில் பல தலைமுறையாக பயன்படுத்திய பாதையை சீரமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
தேனி:
மலைக்கிராம மக்கள் மனு
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி கோரிக்கை மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக குரங்கணி மலைப்பகுதியில் உள்ள சென்டிரல் ஸ்டேசன், டாப் ஸ்டேசன் ஆகிய மலைக்கிராமங்களை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கொட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சென்டிரல் ஸ்டேஷன் கிராமத்துக்கு குரங்கணி சாலையில் முதுவாக்குடி வழியாக ஜீப் செல்லும் பாதை இருந்தது. பல தலைமுறையாக இந்த சாலையை பயன்படுத்தி வந்தோம். சில ஆண்டுகளாக அந்த பாதை மழை மற்றும் இயற்கை சீற்றத்தால் சேதம் அடைந்துள்ளது. எனவே, அந்த பாதையை மக்கள் பயன்படுத்த முடியாத நிலைமை உள்ளது.
இதனால், சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சுற்றி நடந்து செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. வயதானவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர். விளை நிலத்தில் இருந்து விளை பொருட்களை சென்டிரல் ஸ்டேசனில் இருந்து குரங்கணிக்கு கொண்டு வர மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, இந்த மலைப்பாதையை சீரமைத்துக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செங்கல் சூளை
இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆண்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் மீனாட்சிசுந்தரம் தலைமையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் மற்றும் செங்கல் சூளை உரிமையாளர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆண்டிப்பட்டி அருகே கன்னியப்பபிள்ளைப்பட்டியில் 60-க்கும் மேற்பட்ட செங்கல்சூளைகளில் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். இந்த செங்கல் காளவாசல்களுக்கு தேவையான மண், ஜக்கம்பட்டியில் கனிமவளத்துறை அனுமதி அளித்துள்ள தனியார் குவாரியில் இருந்து பெறப்படுகிறது. ஆனால், செங்கல் சூளைகளுக்கு சொந்தமான டிராக்டரில் மண் எடுக்க அனுமதி மறுத்து, குவாரிக்கு சொந்தமான டிராக்டர்களில் மட்டுமே மண் எடுக்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்யப்படுகிறது. இதனால், செங்கல் உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டு, நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே, இதற்கு உரிய தீர்வு ஏற்படுத்தி செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு சொந்தமான வாகனங்களில் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story