கணவா் வீட்டில் கழிவறை இல்லாததால் புதுப்பெண் தற்கொலை


கணவா் வீட்டில் கழிவறை இல்லாததால் புதுப்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 9 May 2022 10:31 PM IST (Updated: 9 May 2022 10:31 PM IST)
t-max-icont-min-icon

கடலூரில் கணவா் வீட்டில் கழிவறை வசதி இல்லாததால் காதல் திருமணம் செய்த ஒரே மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர், 

கடலூர் அரிசிபெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் ரங்கநாயுடு மகள் ரம்யா (வயது 27). எம்.எஸ்.சி. பட்டதாரியான இவர் கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவரும் திருப்பாதிாிப்புலியூா் புதுநகரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மாதம் 6-ந் தேதி இவா்கள் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு புதிய வாழ்க்கையை தொடங்கிய வேளையில் கணவர் வீட்டில் கழிவறை வசதி இல்லாததால் ரம்யா மனவேதனைக்கு ஆளானார். 
இதனால் புதுப்பெண் ரம்யா தனது தாய் வீட்டுக்கு சென்றார். இதையடுத்து கழிவறை வசதியுடன் வேறு வீடு பார்ப்பதாக கார்த்திகேயன் கூறியுள்ளார். ஆனால் அவர் புதிய வீடு பாா்க்கவில்லை என தெரிகிறது. இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தற்கொலை

இதில் மனவேதனையில் இருந்த ரம்யா, வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டுக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மஞ்சுளா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரம்யாவை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார். 
இதுகுறித்து மஞ்சுளா, திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
மேலும் ரம்யாவுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆவதால், அவரது சாவுக்கான காரணம் குறித்து கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு விசாரித்து வருகிறார்.

Next Story